Ad Widget

பிரதமர் மற்றும் அமைச்சரவை இயங்குவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

பிரதமர் மற்றும் அமைச்சரவை இயங்குவதற்கு .இடைக்காலத் தடை உத்தரவு வழங்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளை வழங்கியது.

பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் எந்த அதிகாரத்தைக் கொண்டு பதவியில் நீடிக்க முடியும் என்று நீதிமன்றுக்கு விளக்கமளிக்குமாறு அறிவித்தல் அனுப்ப மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளை வழங்கியது.

அத்துடன், இந்த மனு மீதான விவாதம் வரும் 12ஆம் 13ஆம் திகதிகளில் இடம்பெறும் என்று அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அன்றுவரை மனுவை ஒத்திவைத்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச மற்றும், அமைச்சர்கள், இந்தப் பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான உரிமையற்றவர்கள் என்று, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட யாதுரிமைப் நீதிப்பேராணை மனு மீது இன்று பிற்பகல் இடைக்கால உத்தரவு வழங்கப்பட்டது.

பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய அமைச்சரவைக்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றிய ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பிஆகிய கட்சிகளின் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதிப்பேராணை உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரியே, இந்த யாதுரிமை நீதிப்பேராணை மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு, கடந்த வௌ்ளிக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய இருவர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அன்றைய தினம் மனுதாரர்கள் சார்பான சமர்ப்பணம் ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரனால் முன்வைக்கப்ட்டது. எனினும் எதிர்மனுதார்கள் சார்பான சமர்ப்பணங்கள் நிறைவடையவில்லை. அதனால் விசாரணைகள் இன்று தொடர்ந்தது.

மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் சார்பான சமர்ப்பணங்கள் இன்று நண்பகல் முடிவடைந்த நிலையில், பிற்பகல் 3 மணிக்கு, இந்த மனு மீதான இடைக்கால நிவாரணம் தொடர்பில் கட்டளை வழங்கப்படும் என்று அறிவித்தது.

Related Posts