Ad Widget

பிடிபட்ட தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை மீனவர்களுக்கு வழங்கப்படும்

தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க நுழைந்ததாக கூறி அந்நாட்டு கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைப்பதும், தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழக மீனவர்கள் இலங்கைக்குள் நுழைவது முற்றிலும் தடுக்கப்படும் என்றும், அவர்களது படகுகள் இலங்கை மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை மீன்வளத்துறை மந்திரி மகிந்த அமரவீரா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மன்னார் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மந்திரி மகிந்த அமரவீரா கூறியதாவது:-

இந்திய (தமிழகம் மற்றும் புதுச்சேரி) மீனவர்கள் இழுவைப் படகுகள் மூலம் இலங்கை கடல் பகுதிக்குள் வந்து மீன்பிடித்துச் செல்கின்றனர். இது மீனவர்கள் பிரச்சினை மட்டுமல்ல, நமது நாட்டு பிரச்சினை. கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நான் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் தங்கியிருந்தேன்.

அப்போது அப்பகுதி மீனவர்கள் இந்திய மீனவர்களின் வருகையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை விடுத்தனர். அதனால் இந்திய மீனவர்களின் வருகையை நான் நேரடியாக பார்க்க வேண்டும் என்பதற்காக கடற்படையினரின் உதவியுடன் கடலுக்குள் சென்றேன்.

அப்போது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் நமது கடல்பரப்பில் வருவதை நான் நேரடியாக பார்த்தேன். அப்போது இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் இந்திய மீனவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றங்களில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டேன். இந்த வருட இறுதிக்குள் இந்திய மீனவர்களின் வருகை முற்றிலுமாக தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களின் 60-க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை கடற்படை முகாம்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மந்திரி மகிந்த அமரவீரா பார்வையிட்டார்.

அப்போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை மீனவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு மந்திரி மகிந்த அமரவீரா, ‘நீதிமன்றம் மூலமாக அனைத்து படகுகளையும் அரசு உடமையாக்கி அதன் பின் இலங்கை மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

இலங்கை மந்திரியின் இந்த அறிவிப்பு தமிழக மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Posts