Ad Widget

பாலச்சந்திரன், இசைப்பிரியா படுகொலை விசாரணை அறிக்கை பெப்ரவரியில்!

இசைப்பிரியா, பாலச்சந்திரன் படுகொலைகள் உட்பட நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பில் ஐந்து பேரடங்கிய ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளைக்கொண்ட குழுவொன்று விசாரைணகளை நடத்தி வருகின்றது என்றும், இந்த விசாரணைகளை ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் கண்காணித்து வருகின்றார் என்றும் காணாமல்போகச் செய்யப்பட்டோர் தொடர்பிலும் போர்க்குற்றங்கள் சம்பந்தமாகவும் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்.

அத்துடன், மேற்படி குழு எதிர்வரும் ஜனவரி இறுதியில் விசாரணை அறிக்கையைத் தன்னிடம் ஒப்படைக்கும் என்றும், அதன்பி்ன்னர் பெப்ரவரியில் விசாரணை அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, நவம்பர் முதல் காணாமல்போனோர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் மேலதிக பணிகள் ஆரம்பமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மெக்ஸ்வெல் பரணகம தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு விரைவில் வெளிநாடு செல்லவுள்ளார். அவர் நாடு திருப்பியதும் ஜனாதிபதி மைத்திரிபாலவைச் சந்திப்பதற்கும் மேற்படி குழு உத்தேசித்துள்ளது. வெள்ளைக்கொடி விவகாரம் பற்றி கருத்து வெளியிட்ட பரணகம, “நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பில் எமக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக நாம் ஐவரடங்கிய ஓய்வுபெற்ற பொலிஸ் குழுவொன்றை அமைத்தோம்.

இதில் பெண் அதிகாரியொருவரும் உள்ளடங்குகின்றார். இசைப்பிரியா, பாலச்சந்திரன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளையும் ஆராயும் பொறுப்பு மேற்படிக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

சனல் 4 ஊடகத்தில் வெளியான விடயங்கள் பற்றியும் ஆராயப்படும். விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள், இத்தகைய விசாரணைகளில் அனுபவம் மிக்கவர்கள். இந்த விசாரணைகளை நடுநிலையாக நடத்துவதற்கு, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரும் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குழுவினர், வைத்தியசாலைகள் மீது அரச படையினர் பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டதான குற்றச்சாட்டுக் குறித்தும் விசாரணை நடத்துவர். எட்டு மாவட்டங்களுக்கும் சென்று விசாரணைகளை நடத்தும் இந்தக் குழுவினர் தமது அறிக்கையை வரும் பெப்ரவரி மாதம் சமர்ப்பிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது” – என்றார்.

Related Posts