Ad Widget

பாரபட்சமின்றி எமது கடற்தொழிலாளர்களை விடுதலை செய்யுங்கள் -எஸ்.விஜயகாந்

போதை பொருள் கடத்தல் தொடா்பாக கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் நெடுந்தீவை சோ்ந்த மூன்று கடற்தொழிலாளா்களை பாரபட்சம் இன்றி விடுதலை செய்ய வலியுறுத்தி முற்போக்கு தமிழ் தேசிய கட்சியும்,ஜனநாயக தேசிய முன்னனியும் இனைந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளனா்.

s-vijayakanth

அனுப்பி வைத்த கடிதம் பின்வருமாறு.

20.11.2014
அதிமேதகு ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ
ஜனாதிபதி செயலகம்,
கொழும்பு-01

ஐயா,

பாரபட்சமின்றி எமது கடற்தொழிலாளர்களை விடுதலை செய்யுங்கள்…!!

கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் திகதி நெடுந்தீவுக் கடற் பகுதியில் வைத்து போதைப் பொருள் கடத்தியர்கள் என்ற குற்றச் சாட்டின் பெயரில் கைதுசெய்யப்பட்ட தென் இந்திய மீனவர்கள் ஐவர் உட்பட யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியைச் சேர்ந்த மூன்று இலங்கை மீனவர்கள் உட்பட 8 மீனவத் தொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக கொழும்பு உயர்நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் 30 ஆம் திகதி (30.10.2014) உயர்நீதிமன்றத்தினால் 8 மீனவத் தொழிலாளர்களுக்கும் மரணதண்டனை அளித்து தீர்ப்பளிக்கப்பட்டது தாங்கள் அறிந்த விடயமே. இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட தென் இந்திய தமிழ் கடற்தொழிலாளர்கள் ஐவரையும் தாங்கள் தங்களின் கீழ் இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ததை முற்போக்கு தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக தேசிய முன்னணி ஆகிய நாம் வரவேற்கின்றோம்.

ஆனால் யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் கமல்கிருஸ்டி, துஷாந்தன், கிறிஸ்துராஜா ஆகிய 3 தொழிலாளர்களுக்கும் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யாதது எமக்கு மிகவும் வேதனை அளிப்பதுடன் அவர்களுடைய குடும்பங்களுக்கும் வட மாகாண கடற்தொழிலாளர்களுக்கும் மிகுந்த மனவருத்தத்தை அளித்திருக்கின்றது.

எனவே எமது சகோதரர்களுக்கும் கருணை அடிப்படையில் பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட வேண்டும் என கடற்தொழிலாளர்கள் சார்பாக தங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதுடன், மேற்படி 3 தொழிலாளர்களின் குடும்பங்கள் அன்றாட வாழ்க்கையைக் கூட வாழ முடியாமல் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற நிலமையிலும் தங்களுடைய அப்பா விடுதலை பெற்று வந்து விடுவார் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் அவர்களுடைய பிள்ளைகள் காத்திருக்கின்றார்கள்.

எனவே 3 தொழிலாளர்களின் விடுதலை என்பது அந்த குடும்பங்களின் சுபீட்சமான எதிர்கால வாழ்விற்கு வித்திடும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இந்த விடயத்தில் எந்தவித பாராபட்சமும் இன்றி தென் இந்திய கடற்தொழிலாளர்களிற்கு அளித்த கருணை பொதுமன்னிப்பு போல் எமது தொழிலாளர்களுக்கும் வழங்கும்படி தங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி

-எஸ்.விஜயகாந்.
(முன்னாள் மாநகரசபை உறுப்பினர்)
செயலாளர் நாயகம்,
முற்போக்கு தமிழ் தேசியக் கட்சி

கலாநிதி.ந.குமாரகுருபரன்
(முன்னாள் மாகாணசபை உறுப்பினர்)
தலைவா்,ஜனநாயக தேசிய முன்னணி

Related Posts