Ad Widget

பாதாள உலகக் குழுத் தலைவர் மதூஷின் வடக்கு முகவராக யாழ்.வர்த்தகர் துஷ்யந்தன்!

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுத் தலைவர் என அறிமுகப்படுத்தப்பட்டு டுபாயில் வைத்துக் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதூஷின் வடக்கு மாகாண முகவராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் செயற்பட்டார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தத் தகவலை சிங்கள ஊடகமான லங்காதீப வெளியிட்டுள்ளது. மாகந்துரே மதூஷின் கைதையடுத்து அந்த ஊடகம் வெளியிட்டுவரும் விசாரணை தொடர்பான அறிக்கையிடலியே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடை பாதாளக் குழுவின் தலைவரான மாகந்துரே மதூஷ் கடந்த ஜனவரியில் டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றில் வைத்து அவரும் அவரது சகாக்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் சிறப்பு அதிரடிப்படையினர் முன்னெடுக்கும் தொடர் விசாரணைகளில் மாகந்துரே மதூஷின் குழுவைச் சேர்ந்த பலர் தென்னிலங்கையில் கைது செய்யப்படுகின்றனர். நேற்றுமுன்தினம் தி்ங்கட்கிழமையும் அவரது சகா ஒருவரின் வீட்டிலிருந்து சுமார் 180 கோடி ரூபா பெறுமதியான 171 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

மாகந்துரே மதூஷின் வடக்கு மாகாண முகவராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துஷ்யந்தன் என்பவர் செயற்பட்டுள்ளார் என்று பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த நபரை பொலிஸ் உயர் மட்டத்தினருக்கும் நன்கு தெரிந்தவர் என்றும் பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

Related Posts