Ad Widget

பழுதடைந்த பேருந்தை ஒட்டிச்சென்றதால் விபத்து! பாடசாலை மாணவியும் தந்தையும் படுகாயம்!!

காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து, அதன் முன்புறமாக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த உந்துருளியை மோதியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவியையும் அவரைப் பாடசாலைக்கு ஏற்றிச் சென்ற தந்தையாரும் காயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் நகரில் முட்டாஸ் சந்திக்கு அருகில் நேற்று இடம்பெற்றது.
காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்தபோதே இருவரையும் மோதியது என்று தெரிவிக்கப்பட்டது. வேம்படி மகளிர் கல்லூரியில் தரம் 10இல் கற்கும் மாணவியும் அவரது தந்தையும் காயமடைந்தனர்.

விபத்துக்குள்ளான பேருந்து முன்னர் காரைநகர் வழித்தடத்தில் யாழ்ப்பாணம் நோக்கி வரும்போது சங்கானையில் வேகத்தடை (பிறேக்) செயற்படவில்லை, ஸ்கியரிங் திருப்ப முடியவில்லை என்று சாரதி அலைபேசியில் யாருக்கோ தகவல் வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்தும் பயணித்த பேருந்து காங்கேசன்துறை வீதியில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியை அடைந்து முட்டாஸ் கடைச் சந்தியின் ஊடாக ஸ்ரான்லி வீதியூடாகவே நகரை அடைய வேண்டிய நிலையிலேயே பேருந்தைத் திருப்புவதற்கு சாரதி முயன்றுள்ளார் என்று அதில் பயணித்த பயணியோருவர் தெரிவித்தார். அவர் யாழ்ப்பாண நகரில் வேலைசெய்கிறார்.

பேருந்தைத் திருப்ப இயலாத காரணத்தால் இ.போ.ச தனக்குரிய வழித்தடப்பாதையில்பயணிக்காது வேறு வழித்தடத்தில் காங்கேசன்துறை வீதிவழியாக நேரில் பயணிக்க முற்பட்டது. அதன்போதே பாடசாலை மாணவியை இ.போ.ச. மோதியது என்று தெரிவிக்கப்பட்டது.

இது ஒருபுறமிருக்க, விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவியினதும் தந்தையினதும் தலைக் கவசங்களை விபத்து குறித்த பேருந்தில் எடுத்துச் சென்றுள்ளனர் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டார். அவர் விசாரணையில் உள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் காரைநகர் இ.போ.சபை முகாமையாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “விபத்துக்குள்ளான உந்துருளி மானிப்பாய் வீதி வழியாகப் பயணித்த நிலையில் வீதிக்குக் குறுக்கே பயணித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதேநேரம் பாடசாலை மாணவர்கள் உள்ள நிலையில் பாடசாலைக்கான வீதியில் பயணிக்க முடியும். இதேநேரம் பழுது தொடர்பில் எமக்கு எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

Related Posts