Ad Widget

பல்கலை.மாணவர்கள் படுகொலை: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பொலிஸார் மூவரும் அரச சாட்சிகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்க சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் அரச சாட்சிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று அறிவிக்கப்பட்டது.

ஏனைய இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராகும் இலங்கை குற்றவியல் சட்டக் கோவை 296ஆம் பிரிவின் கீழ் கொலைக்குற்றச்சாட்டு மீதான சுருக்க முறையற்ற விசாரணை வரும் ஒக்டோபர் 2ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பொலிஸ் மா அதிபர் பாரப்படுத்தினாார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் உடனடியாக ஆரம்பித்து, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்பட 5 பொலிஸாரைக் கைது செய்தனர். அவர்கள் ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் கடந்த செப்ரெம்பர் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் ஐவரும் பொலிஸ் சேவையில் மீளவும் இணைக்கப்பட்டுள்ளனர்.

3 பொலிஸார் விடுவிப்பு

வழக்கில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டிருந்த 5 சந்தேகநபர்களில் இரண்டாவது சந்தேகநபர் எக்கநாயக்க முதியான்சலாகே ஜயவர்த்தன, நான்காவது சந்தேகநபர் தங்கராஜன் லங்காமனன், ஐந்தாவது சந்தேகநபர் கமல விதானகே நவரத்ன பண்டார ஆகியோரை வழக்கிலிருந்து விடுவிப்பதாக சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று அறிக்கையிட்டனர்.

மேலும் கடமைக்கு பொறுப்பாகவிருந்தவரான முதலாவது சந்தேகநபர் சரத் பண்டார திசாநாயக்க மற்றும் சூடு நடத்தியவரான மூன்றாவது சந்தேகநபர் சமர ஆராய்சிலாகே சந்தன குமார சமர ஆராச்சி ஆகிய இருவருக்கும் எதிராக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் 296ஆம் பிரிவின் கீழான கொலைக் குற்றச்சாட்டின் கீழ் பிராது பத்திரத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.

சம்பவம் தொடர்பான சுருக்கமுறையற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்படாத நிலையில் வழக்கு இன்று 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது..

வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் அரச சாட்சிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றுக்கு அறிவித்தனர்.

அதனையடுத்து வழக்கு விசாரணை வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்துவரும் தவணைகளில் சுருக்கமுறையற்ற விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முடிவுறுத்தப்பட்டு வழக்கு ஆவணங்கள் மேல் நீதிமன்ற நடவடிக்கைக்காக சட்ட மா அதிபரிடம் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Related Posts