Ad Widget

பல்கலை மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: 3 பொலிஸாரை விடுவிக்க பணிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவரை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பணிப்புரைவிடுத்துள்ளது.

அத்துடன், 2 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்து சுருக்க முறையற்ற விசாரணையை ஆரம்பிக்குமாறும் சட்ட மா திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20 ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

அதில் தொடர்புபட்டதாகக் கூறப்படும் 5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் கடந்த செப்ரெம்பர் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அத்துடன் அவர்கள் ஐவரும் பொலிஸ் சேவையில் மீளவும் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான சுருக்கமுறையற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்படாத நிலையில் வழக்கு எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் வழக்கிலுள்ள 5 சந்தேக நபர்களில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட 3 பொலிஸாரை விடுவிப்பதற்கான சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலை குற்றப் புலனாய்வுப் பிரிவு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு அறிவிக்கவுள்ள நிலையில் 3 பொலிஸ் உத்தியோகத்தர்களும் வழக்கிலிருந்து நீதிமன்றால் விடுவிக்கப்படுவார்கள்.

மேலும் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக குற்றப்பத்திரத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தாக்கல் செய்வர். அதனையடுத்து சுருக்க முறையற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிய வருகிறது.

Related Posts