Ad Widget

பல்கலையில் நாங்கள் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதில்லை – கூறுகிறார் விமலசேன

police-vimala-sena
பல்கலைகழகங்களிற்குள் மிக முக்கியமான காரியங்கள் தவிர்ந்து பிரதேவைகளுக்காக பொலிஸார் உட்புகுவதில்லை என யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கடந்தவாரம் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

கடந்த மாதம் 17 ஆம் திகதி பல்கலைக்கழக வளாகத்திற்குள் பேராசிரியர்கள், மாணவர் ஒன்றிய தலைவர்கள், ஊடகவியலாளர்கள் பெயர் குறிப்பிடப்பட்டு இவர்களுக்கு இறுதி எச்சரிக்கை என குறிப்பிட்டு தேசம் காக்கும் படையினர் என்ற இனம் தெரியாத நபர்களால் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப் பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் எவரும் கைது செய்யப்படவில்லை என கடந்தவாரம் கேள்வி எழுப்பியிருந்தீர்கள். பொலிஸாரால் பல்கலைக்கழகங்களிற்குள் சென்று புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்ள முடியாது.

ஏனெனில் நாங்கள் முக்கியமான விடயம் தவிர்ந்த ஏனைய விடையங்களுக்காக பல்கலைக்கழகங்களிற்குள் உட்புகுவதில்லை அதனை தவிர்த்து வருகின்றோம். எனினும் இந்த சம்பவம் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் மூலமாக புலனாய்வு மேற்கொண்டு வருகின்றோம் எனினும் யார் இதை செய்தார்கள் என்பது தொடர்பில் சரியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை மேலதிக புலனாய்வினை மேற்கொண்டுவருகின்றோம் என் தெரிவித்தார்.

Related Posts