Ad Widget

பரந்த மனங்கொண்ட தலைவரைத் தெரிவு செய்வோம் – யாழ்.ஆயர்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாம் நன்கு சிந்தித்து, நம் நாட்டுக்குத் தேவையான பரந்த மனங்கொண்ட தலைவரைத் தெரிவு செய்து, நிலையான அமைதியை எம் மண்ணுக்கு கொண்டுவர முயற்சிப்போம் என யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளார் தெரிவித்தார்.

jaffna-ayar-thomas

தனது கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘அகிலம் முழுவதும் அன்புத் தெய்வமாய் ஆதரவற்றோருக்கு அடைக்கலமாய் திகழும் கிறிஸ்துவின் பிறப்புவிழா மீண்டுமொருமுறை எம்மை எதிர்கொள்கின்றது. இக்காலத்தில் அனைத்து மக்களின் விடிவுக்காக பாலனாய் பிறந்த ஆண்டவர் இயேசுவின் வருகையை கொண்டாடி மகிழ்கின்றோம்.

கிறிஸ்து பிறப்பு கிறிஸ்தவர்களுக்கு மட்டும் உரியது அன்று. அவரது பிறப்பால் அனைத்துலகமும் ஒளிபெற்று, இருள் அகன்று மகிழ்கின்றது. எம்மைப் பிரிக்கும் இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒரு தாய் மக்கள் என எம்மை ஒற்றுமைப்படுத்தும் இயேசுவின் பிறப்பால் நாம் உயர்வு பெறுகின்றோம்.

இந்நிலையில் இலங்கையின் அப்போஸ்தலர் என வர்ணிக்கப்படும் புகழ்பெற்ற ஜோசப்வாஸ் அடிகளின் புனிதர் பட்ட விழாவும் திருத்தந்தையின் வடக்கு விஜயமும் மகிழ்வைத் தரும் வேளையில் இயேசுவின் பிறப்பு விழா அமைவது இரட்டிப்பான மகிழ்வை எமக்குக் கொடுக்கின்றது.

புதிய ஆண்டில் ‘குடும்பங்களும் அர்ப்பண வாழ்வும்’ எனும் கருப்பொருளில் சிந்திக்கவுள்ள நிலையில் நாம் அனைவரும் அர்ப்பணம் நிறைந்த மக்களாக வாழ அழைக்கப்படுகின்றோம். குடும்பங்களில் அர்ப்பண வாழ்வும், புனிதமும், பகிர்தலும், நிறைந்திட ஆசிக்கின்றேன்.

புதுவருடத்தில் எல்லா வகையான துன்பங்களிலிருந்தும் உங்களை காத்து அன்பும் அமைதியும் நிறைந்த குடும்பங்களாக அனைவரும் அர்ப்பண உணர்வோடு வாழ்ந்திட பாலன் இயேசு ஆசி வழங்கி காப்பாராக. அனைவருக்கும் எனது செபமும் அன்பும் நிறைந்த நத்தார் புதுவருட நல்வாழ்த்துக்களை ஆசிகளையும் கூறி நிற்கின்றேன் என அவர் தெரிவித்தார்.

Related Posts