பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க ஜேர்மன் துணைத் தூதுவரிடம் கோரிக்கை!

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கும், அரசாங்கத்தால் கொண்டுவரப்பட உள்ள ஊடக சாசனத்தை நிறுத்துவதற்கான அழுத்தங்களை வழங்குமாறும் இலங்கைக்கான ஜேர்மன் துணை தூதுவர் சார கசல்பார்த் அவர்களிடம் மட்டு ஊடக அமையத்தில் வைத்து ஊடகவியலாளர்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மட்டு ஊடக அமையத்திற்கு விஜயம் செய்த ஜேர்மன் துணை தூதுவருக்கும் மட்டு ஊடக நிர்வாகத்தினருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இச் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கேட்டறிந்ததோடு, அரசாங்கத்தின் தற்கால செயற்பாடுகள், தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜெர்மன் துணை தூதுவர் கேட்டரிந்து கொண்டார்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் பல்வேறு பட்ட விசாரணைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், ஊடகவியலாளர்கள் மீது பிரயோகிக்கப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கும், ஊடாக சுதந்திரம் பாதுகாக்கவும், தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், அரசியல் தீர்வை வழங்குவதற்கும் ஜெர்மன் அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் ஊடகவியலாளர்கள் கோரிக்கை முன் வைத்தனர்.

இச் சந்திப்பில், மட்டு ஊடக அமையத்தின் தலைவர் வ. கிருஷ்ணகுமார், பொருளாளர் கிருஷ்டிராஜ், மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர்களான புண்ணியமூர்த்தி சசிகரன், செ. நிலாந்தன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

Related Posts