Ad Widget

படைகளிடமுள்ள தனியாரின் காணிகள் , கட்டடங்களை விடுவியுங்கள்: ஜனாதிபதிக்கு கடிதம்

வடக்கு மாகாணத்தில் ஆயுதப்படைகள் வசமிருக்கும் தனியார் காணிகள் மற்றும் கட்டடங்கள் அனைத்தையும் இந்த வருட இறுதிக்குள் உரிமையாளர்களிடம் விடுவிக்குமாறு வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

CVK-Sivaganam

கடந்த மாதம் 09 ஆம் திகதி வடக்கு மாகாண சபையில் இடம்பெற்ற காணி சுவீகரிப்பு தொடர்பிலான விசேட அமர்வில் இவ்வருடம் இறுதிக்கு முன்னர் வடக்கில் தனியார் காணிகள் மற்றும் கட்டங்களில் இருக்கும் ஆயுதப் படைகள் வேளியேற வேண்டும் என்ற தீர்மானம் சபையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் கடந்த 3ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்று வடக்கு மாகாண அவைத்தலைவரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்த சபையானது போர் முடிவுக்கு வந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் காணிகளினதும் கட்டடங்களினதும் உரிமைகளை மறுப்பது நியாயமற்றதும், அநீதியானதுமான விடயம் எனக்கருத்தில் எடுத்துக் கொள்கிறது.

இந்தக் காணி உரிமையாளர்கள் நலன்புரி நிலையங்களிலும், வாடகை வீடுகளிலும், நண்பர்கள் உறவினருடனுமே இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக வாழ்ந்து வருவதைக் குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும்.

இவ்விடயத்தைச் சுட்டிக் காட்டும் ஒரு விடயமாக நாம் பின்வரும் விபரங்களைக்காட்டும் நிரல்களை இத்துடன் இணைக்கின்றோம்.

1. நிரல் -அ- வலிகாமம் வடக்கு பிரிவின் 28 கிராம அலுவலர் பிரிவுகளில் ஆயுதப்படைகள் வசமிருக்கும் 6526 ஏக்கர் தனியார் காணிகள்.

2. நிரல் -ஆ- தங்கள் சொந்தக்காணிகளில் இன்னமும் மீளக் குடியமர்த்தப்படாது சுகாதாரமற்ற நிலமையில் 4656கும் மேற்பட்ட உள்ளக இடம் பெயர்வினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் 03 நலன்புரி நிலையங்கள்.

3. நிரல் -இ- தென்மராட்சிப் பகுதியிலுள்ள 10 கிராம அலுவலர் பிரிவுகளில் ஆயுதப்படைகளின் வசமிருக்கும் 16 வீடுகள் மற்றும் 30 காணிகள்.

எனவே வடக்கு மாகாணத்தின் 05 மாவட்டங்களிலும் ஆயுதப்படைகளின் வசமிருக்கும் தனியார் காணிகளையும் கட்டடங்களையும் விடுவிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மேன்மை தங்கிய தங்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.

என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts