Ad Widget

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினம் பல்வேறு இடங்களில் அனுஷ்டிப்பு!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினம் வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்படி, யாழ். ஊடக அமையத்தில் இன்று (வியாழக்கிழமை) மதியம் நடைபெற்ற நினைவு நிகழ்வில் யாழ். ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவித்து , மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வானில் வந்த இனம்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்துக்கு அருகில் படுகொலையான நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அதேபோல், ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலகச் செய்தியாளராகக் கடமையாற்றி வந்த வேளை கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இதேவேளை, குறித்த நினைவு நிகழ்வில் கொரோனோ தொற்றினால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள் மற்றும் மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் கொரோனோ தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலம்பெற வேண்டி பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் மாமனிதர் தர்மரட்ணம் சிவராமின் 16ஆவது ஆண்டு நினைவு தினம் வவுனியாவிலும் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் சு.வரதகுமார் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றதுடன் அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில் அன்னாரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது, சிவராம் தொடர்பான நினைவுரையினை ஊடகவியலாளர் ந.கபிலநாத் நிகழ்த்தியிருந்ததுடன் நிகழ்வில் வவுனியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு. ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் மட்டு. ஊடக அமையத்திலும் ஊடகவியலாளர் சிவராமின் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது.

சிவராமின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, 16 ஈகைச் சுடரேற்றப்பட்டு, மலர்தூவி, இரண்டு நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில், சிரேஷ்ட ஊடகவியலாளரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேந்திரன், மூத்த ஊடகவியலாளர்களான சிவம் பாக்கியநாதன், அ.கங்காதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு சிவராமிற்கு அஞ்சலி செலுத்தினர்.

Related Posts