Ad Widget

பகிடிவதை குறித்து வெளிவந்த செய்திகள் தொடர்பாக யாழ். பல்கலைக்கழகம் விளக்கம்

பகிடிவதையானது சமூக வலைத்தளங்களில் வெளியானவாறு பாலியல் ரீதியில் புரியப்பட்டதற்கான ஆதாரங்கள் எவையேனும் கண்டறியப்படவில் என யாழ். பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் சில சமூக ஊடகங்களால் வெளியிடப்பட்ட செய்திகளின் உண்மைத்தன்மை குறித்த விசாரணைக்குழு அதனது அதிகார வரம்பினுள் ஆராய முடியவில்லை. அதனால் இவற்றை ஆராயுமாறு பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் யாழ்.பல்கலைகழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில்நுட்பபீட மாணவர்களால் பகிடிவதை புரியப்பட்டமை தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் கண்டறியப்பட்ட விடயங்கள் அறிக்கை ஒன்றின் ஊடாக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட சிரேஷ்ட மாணவர்களால் அப்பீட புதுமுக மாணவர்களுக்கு கையடக்கத் தொலைபேசி ஊடாக பாலியல் ரீதியாக பகிடிவதை புரியப்பட்டதாக 06.02.2020 திகதியிலிருந்து வெளியாகிய செய்திகளினையடுத்து, இப்பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசாமியால் அவசர விசேட சந்திப்பு ஒன்று 07.02.2020 அன்று கூட்டப்பட்டது.

இச்சந்திப்பில் குறித்த செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராயவும் இச்செயல்களில் ஈடுபட்ட மாணவர்களை இனங்காணவும் ஓர் பூர்வாங்க விசாரணை நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டு ஐவர் அடங்கிய வி்சாரணைக் குழு அமைக்கப்பட்டது.

மேலும் இக் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு ஒரு முறையான விசாரணைக் குழுவை நியமித்து சம்பந்தப்பட்ட மாணவர்களை இனங்கண்டு உறுதிப்படுத்தி அவர்களைத் தண்டிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.

இக்குழு 07.02.2020 திகதியன்றே தனது விசாரணைகளை முன்னெடுக்க ஆரம்பித்ததுடன், ஏழு தடவைகள் மாணவர்களை சந்தித்து விசாரணைகளை மேற்கொண்டதுடன், இது சம்பந்தப்பட்ட ஆதாரங்களையும் சேகரித்திருந்தது.

மேலும் இக்குழுவின் பரிந்துரையுடன் இப்பல்கலைக்கழகம் சில கையடக்கத் தொலைபேசி இலக்கங்களை பொலிஸ் நிலையம் ஊடாக தேசிய சைபர் பாதுகாப்பிற்கான நிலையத்துக்கு அனுப்பியது.

குறித்த விசாரணைக் குழு சமூக வலைத்தள ஊடங்களில் வெளியானவாறு பாலியல் ரீதியான பகிடிவதை புரியப்பட்டதா என்பதையும் குறித்த புதுமுக மாணவர்கள் சிரேஷ்ட மாணவர்களினால் இதைவிட வேறு ஏதேனும் வகையில் பகிடிவதைக்குள்ளாகியுள்ளனரா என்பதைக் கண்டறியும் நோக்குடன் செயற்பட்டது.

குறித்த பூர்வாங்க விசாரணை 16.02.2020 அன்று முடிவுறுத்தப்பட்டது அதனது அறிக்கை 18.02.2020 அன்று தகுதிவாய்ந்த அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.

இப்பல்கலைக்கழகம் முறையான விசாரணை ஒன்றை ஆரம்பிக்கவுள்ள நிலையில், இப்பூர்வாங்க விசாரணை அறிக்கை தொடர்பான சுருக்கமான அம்சங்களை பின்வரும் காரணங்களுக்காக பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்துகிறது.

சமூக ஊடகங்களில் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் என வெளிவந்த செய்திகளிலும் விசாரணை நடத்திய முறை தொடர்பாக வெளிவந்த சில செய்திகளிலும் உண்மைக்குப் புறம்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தமை.

சில மாணவர்களது கையடக்கத் தொலைபேசி இலக்கங்களும் சிலரின் புகைப்படங்களும் இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என சமூக வலைத்தளங்களில் வெளியாகியதால் அம்மாணவர்களுக்கு பல்வேறுபட்ட அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டமை. இப்பல்கலைக்கழகத்தினால் இது தொடர்பாக நடத்தப்பட்ட பூர்வாங்க விசாரணை அறிக்கையின் சாராம்சம் பின்வருமாறு,

1.வட்ஸ்அப் உரையாடல் மூலம் சிரேஷ்ட மாணவர்கள் கனிஷ்ட மாணவர்கள் என்ற படிநிலையை இப்பீடத்தில் அமுல்படுத்தும் நிலையிலான பகிடிவதைகள் இடம்பெற்றுள்ளன.

2. இங்கு சிரேஷ்ட மாணவர்கள் என்று குறிப்பிடப்பட்டவர்கள் இப்பீடத்தின் 3ஆம் அணி மாணவர்களாவர்.

3.சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்த பின்னர் (06.02.2020ஆம் திகதியிலிருந்து) பல்கலைக்கழக நிர்வாகத்தின் விசாரணைகளில் இடையூறு செய்யும் வகையிலான அல்லது கனிஷ்ட மாணவர்களை அச்சுறுத்தும் வகையிலான குறுஞ்செய்திகளும் ஒலிப்பதிவு செய்யப்பட்ட செய்திகளும் வட்ஸ்அப் உரையாடல்களில் சிரேஷ்ட மாணவர்களால் கனிஷ்ட மாணவர்களுக்குப் பகிரப்பட்டுள்ளன.

மேற்குறித்த காரணங்களால் 6 மாணவர்களுக்கு மேலதிக விசாரணைகளுக்குத் தடை ஏற்படாத வகையில் தற்காலிகமாக பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 6 மாணவர்கள் மேற்படி விடயங்களுக்கு உடந்தையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் 12 மாணவர்களிற்கும் எதிராக குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டு விசாரணை நடைபெறவுள்ளது.

இதுவரை இப்பல்கலைக்கழகத்துக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் குறித்த பகிடிவதையானது சமூக வலைத்தளங்களில் வெளியானவாறு பாலியல் ரீதியில் புரியப்பட்டதற்கான ஆதாரங்கள் எவையேனும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூக வலைத்தளங்களில் முதலாவதாக வெளியாகிய சில கையடக்கத் தொலைபேசி இலக்கங்களை உடைய பெரும்பாலான மாணவர்கள் குறித்த பிரச்சினைக்குரிய வட்அப்ஸ் குழுவின் உரையாடல்களில் எந்தவிதமாகவும் தங்களை ஈடுபடுத்தாதவர்கள் என்பது குறித்த விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எனினும் பொலிஸ் நிலையத்தினூடாக அவ்விலக்கங்கள் தொடர்பாக இடம்பெற்ற உரையாடல்களின் வரலாற்றைப் பெற்றுத் தருமாறு தேசிய சைபர் பாதுகாப்பிற்கான நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேலும் சமூக வலைத்தளங்களில் 5 மாணவர்களது புகைப்படங்களும் வெளியாகியிருந்தன. இதில் மூன்று மாணவர்கள் எந்தவித தொலைபேசி உரையாடல்களிலும் இப்புதுமுக மாணவர்களுடன் குறித்த வட்ஸ்அப் குரூப் மூலம் ஈடுபடவில்லை என்று கண்டறியப்பட்டது.

மேலும் சமூக வலைத்தளங்களில் வெளியான கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள் மூலமோ புகைப்படங்கள் மூலமோ அடையாளம் காணப்படாத மாணவர்கள் இக்குறித்த பகிடிவதை உரையாடல்களில் சம்பந்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டன.

இது இவ்வாறிருக்க குறித்த பகிடிவதைச் செயற்பாடுகளிலும் எந்தவிதத்திலும் ஈடுபடாத மாணவர்களது விவரத்தை சில சமூக வலைத்தளங்கள் ஏன் வெளியிட்டன என்பது தொடர்பாகவும் இதன் பின்புலம் தொடர்பாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் சில சமூக ஊடகங்களால் வெளியிடப்பட்ட செய்திகளின் உண்மைத் தன்மையினை குறித்த விசாரணைக் குழு அதனது அதிகார வரம்பினுள் ஆராய முடியவில்லை. அதனால் இவற்றை ஆராயுமாறு பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனவே இதுதொடர்பான முறையான விசாரணை ஒன்று நிறைவடைந்து இப்பல்கலைக்கழகத்துக்கு உரித்தான ஒழுக்காற்று முறையினுள் உள்வாங்கப்பட்ட விதிகளுக்கு அமைவாக குற்றமிழைத்திருப்பின் அம் மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக இப்பல்கலைக்கழகம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அதுவரைக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறும் இப்பல்கலைக்கழகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts