நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட ஞானசார தேரர் உட்பட அனைவருக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படவுள்ளபோதும் சந்தேக நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவிருப்பதாக வடமாகாண சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது என சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.

நீராவியடிப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டமை மற்றும் சட்டத்தரணிகள், பொதுமக்கள் தாக்கப்பட்டமை தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றிற்கு முன்பாக வடக்குமான சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்தினை அடுத்து, போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் சட்டத்தரணி மீது தாக்குதல் நடத்திய பிக்கு மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்தோடு ஞானசார தேரர் மீது உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்டவிரோத நடவடிக்கையின்போது அதனை பார்த்துக்கொண்டிருந்த பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் நீதிமன்றில் முன்னிறுத்தப்படும் வரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்தும் பணிப் பகிஷ்கரிப்பு இடம்பெறும்” என அவர் கூறினார்.
ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி அண்மையில் பொது மன்னிப்பை வழங்கி விடுதலை செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.