Ad Widget

நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிராக போக்குவரத்துச் சபை கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்கு பிராந்திய சாலை நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பிராந்திய முகாமையாளரை மாற்றுமாறு வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

போக்குவரத்துச் சபையின் வடக்கு பிராந்திய இணைந்த தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்டோர் கூறுகையில், “இ.போ.ச வடக்கு பிராந்திய சாலையின் நிர்வாகத்தில் பாரிய முறைகேடுகள் நடைபெறுகின்றன. அதேவேளையில் தொடர்ந்தும் நிர்வாகச் சீர்கேடுகளும் அதிகரித்து வருகின்றன.

மேலும் தங்களது பதவிகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் தொழிலாளர்களை பழிவாங்கும் செயற்பாடுகளை அதிகாரிகள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிர்வாக முறைகேடுகள், சீர்கேடுகள் மற்றும் பழிவாங்கல்கள் தொடர்பில் குரல் கொடுக்கின்ற தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மீதும் பொய்க்குற்றச் சாட்டுக்களைச் சுமத்தி அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்கின்றனர்.

இதனால் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு பெரும் இன்னல்களுக்கும் முகம்கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறு அதிகாரிகளின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று நாங்கள் கோருகின்றோம்.

அத்தோடு வட பிராந்திய நிர்வாகச் சீர்கேடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். தொழிலாளர்கள் மீதான பழிவாங்கல்கள் நிறுத்தப்பட வேண்டும்” என அவர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.

அந்தவகையில் இவ்விடயத்தில் உரிய தீர்வு வழங்கப்படாவிடின் தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அச்சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts