நிரந்தர நியமனம் கோரி சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்.மாவட்டத்தில் பொது சுகாதார பரிசோதர்களின் கீழ் சுகாதார தொண்டர்களாக கடமையாற்றிய ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க கோரி அமைதியான ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.

Capture

வடமாகாண சபையின் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை காலைமுதல் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்ட ஊழியர்கள், நண்பகல் வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கத்தினை சந்தித்து கலந்துரையாடினார்கள்.

அந்த சந்திப்பின் போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,

கடந்த 16 வருடங்களாக சுகாதார தொண்டர்களாக கடமையாற்றிய தமக்கு, நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

எனினும் தமக்கான நிரந்தர நியமனம் பற்றி எந்த கருத்துக்களும் இதுவரையில் தெரிவிக்காத நிலையில், தற்போது புதியவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், தமக்கான நிரந்தர நியமனம் பற்றிய முடிவுகளை தெரிந்து கொள்வதுடன், தமக்கான நிரந்தர நியமனம் வழங்குமாறும், தாம் பல தரப்பினராலும், தரக்குறைவாக பேசக்கூடிய நிலமைக்குள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

அதற்கு வடமாகாண சுகாதார அமைச்சர் பதிலளிக்கையில்,

கடந்த ஆட்சியில் இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இலங்கை அபிவிருத்தி அடைந்துவிட்ட நாடாக பல சர்வதேச நாடுகளுக்கு தெரிவித்திருக்கின்ற நிலையில், நிதி உதவிகளை வழங்குவதற்கு பல சர்வதேச நாடுகள் முன்வரவில்லை.

தொண்டர்களாக கடமைக்கு அமர்த்தி சம்பளம் வழங்குவதற்கான நிதி இல்லாத காரணத்தினால், தற்போது ஒன்றும் செய்ய முடியாத நிலமை காணப்படுவதனால், நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கத்துடன் பேசி முன்னெடுத்து வருகின்றதாகவும், அதற்கான காலம் வரும் போது, தெரியப்படுத்துவதாகவும், வடமாகாண சுகாதார அமைச்சர் கூறியதாக சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.

Related Posts