Ad Widget

நிரந்தரமாக காணிகளை சுவீகரிக்கும் முப்படையினர்

யாழ். மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியே பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள படைத்தரப்பினர், மற்றும் பொலிஸார் அக்காணிகளை நிரந்தரமாகச் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரியவருகிறது.

இராணுவம், கடற்படை மற்றும் பொலிஸாரின் ஆக்கிரமிப்பில் உள்ள சுமார் 60 வீதமான காணிகளே இவ்வாறு நிரந்தரமாகச் சுவிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2013 ஆம் ஆண்டு யாழ்.மாவட்டச் செயலகத்தில் திறந்து வைக்கப்பட்ட காணி, காணி அபிவிருத்தி அமைச்சால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின்படியே குறித்த காணிகள் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு சுவீகரிக்க இனங்காணப்பட்ட காணிகளை ஜீ.பி.எஸ் கருவி மூலம் நில அளவை செய்யும் பணிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக அறிய முடிகின்றது.

2013 ஆம் ஆண்டு கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அப்போதைய காணி அமைச்சர் ஜனக பன்டார தென்னக்கோன் யாழ்.மாவட்டத்தில் படைத்தரப்பினர் மற்றும் பொலிஸார் ஆக்கிரமித்திருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.

இந்த நடவடிக்கைகளுக்கு ஏதுவாக யாழ்.மாவட்டச் செயலகத்தில் காணி, காணி அவிபிருத்தி அமைச்சின் அலுவலகம் ஒன்றும் அப்போது திறந்துவைக்கப்பட்டது. இந்த அலுவலகத் திறப்புவிழாவில் அப்போதைய மாவட்ட இராணுவத் தளபதியும் கலந்துகொண்டார்.

இந்த அலுவலகத்தின் ஊடாக சில காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டன. எனினும் காணிகளை சுவீகரிக்க நில அளவை மேற்கொள்ள காணி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் இந்த முயற்சி தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அடையாளப்படுத்தப்பட்ட படைத்தரப்பினர் மற்றும் பொலிஸார் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டத்தில் வலி.வடக்கு உள்ளிட்ட உயர் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியே 24 பேருக்குச் சொந்தமான 10.10 ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்து இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். 69 பேருக்குச் சொந்தமான 13.33 ஏக்கர் காணிகளை பொலிஸார் ஆக்கிரமித்துள்ளனர். 79 பேருக்குச் சொந்தமான 37.725 ஏக்கர் நிலப்பரப்பை கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

இதுதவிர யாழ்.மாவட்டத்தில் உள்ள அரச காணிகளில் 111.63 ஏக்கர் இராணுவத்தினர் வசமும், 11.15 ஏக்கர் கடற்படை வசமும் 40 ஏக்கர் விமானப் படை வசமும் உள்ளன. 33.50 ஏக்கர் காணிகளை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸார் ஆக்கிரமித்துள்ள காணிகளையே நிரந்தரமாகச் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Posts