Ad Widget

நிதி நிறுவனங்கள் மக்களை ஏமாற்ற மூல காரணம் சப்றா நிறுவனமே! : டக்ளஸ்

தென்னிலங்கையில் சக்விதி முதற்கொண்டு இன்றைய ஈ. ரி, ஐ. (ETI) வரையிலான நிதி நிறுவனங்கள் எவ்வாறு மக்களை ஏமாற்றி, மக்களது பணத்தினை கொள்ளையிட்டிருக்கின்றனவோ, அதே போன்று யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் எமது மக்களின் பணத்தை பெருவாரியாக கொள்ளையிட்ட சப்றா நிறுவனம் குறித்தும் சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்வர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற குற்றவாளிகளை ஒப்படைத்தல் கட்டளைச் சட்டம் மற்றும் கடன் இணக்க கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இவ்வாறு மக்களிடமிருந்து கொள்ளையிட்ட பணம் இன்று ஊடகங்களாக மாற்றம் பெற்று விற்பனை பண்டங்களாக மாறியிருக்கின்ற நிலையில், சப்றா நிறுவனத்தில் தங்களது பணத்தை வைப்பிலிட்டு ஏமாந்து நிற்கும் எமது மக்களுக்கு அந்தப் பணத்தை வட்டியுடன் திருப்பிப் பெற்றுக் கொடுக்க முடியும் என்தையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அப்போதைய காலகட்த்தில் அவர்களுக்கு சார்பான அரசியல் சூழல் காரணமாக இந்த சப்றா நிதி நிறுவன மூலகர்த்தாக்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிட்டார்கள். தற்போதைய நிதி நிறுவனங்கள் பலவும் எமது மக்களை மிக அதிகளவில் ஏமாற்றி, கொள்ளையிட்டு வருவதற்கும் இந்த சப்றா நிதி நிறுவனமே மூல காரணம் என்பதையும் இங்கு மீண்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

எமது மக்களின் அவலங்கள் இத்தகைய அனைத்து வடிவங்களிலும் குடிகொண்டிருக்கின்றன. இயற்கை பாதிப்புகளாக இருக்கட்டும்,. செயற்கை அனர்த்தங்களாக இருக்கட்டும். போதைப் பொருளாக இருக்கட்டும். அரசின் பாராமுகமாக இருக்கட்டும். இவை அனைத்துக்கும் முதன்மை காரணகர்த்தாக்களாக எமது மக்களின் வாக்குகளை சுரண்டிய தமிழ் அரசியல்வாதிகளே இருக்கின்றார்கள்.

தெற்கிலே ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு போராடுகிறோம் எனக் கூறித் திரிவோர், வடக்கிலே எமது மக்களைப் பாதுகாப்பதற்கு வக்கற்றவர்களாக இருக்கின்றனர். எமது மக்கள் நாளாந்த வாழ்க்கையில் பல்வேறு சுமைகளுடன், எதிர்காலத்தை கேள்விக்குறியோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், அடுத்தகட்ட நகர்விற்கு எமது மக்கள் யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களிடம் போய் அரசியல் யாப்பு பற்றி பேசி, தங்களது கையாலாகாத் தனத்தினை வியாக்கியானப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில்கூட, எமது மக்களிடையே கருத்தறியப் போய், எமது சமூக பிரமுகர்களினால் நன்றாக வாங்கிங் கட்டிக் கொண்டும், அதிலிருந்தேனும் ஏதாவது பாடம் படித்து, எமது மக்களுக்கு ஒரு நல்லதையாவது செய்ய வேண்டும் என்ற நினைப்பே இல்லாத இவர்களால்தான் எமது மக்கள் இன்று இத்தகைய பாதிப்புகளை அடைந்து வருகின்றனர்.

Related Posts