Ad Widget

‘நாட்டில் அரசாங்கம் இல்லை, பிரதமர் இல்லை“ – இரா. சம்பந்தன்

அதிகாரம் இல்லாத ஆட்சி மிகவும் ஆபத்தானது என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள உலக நாடுகளின் தூதுவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று(செவ்வாய்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து உலக நாடுகளின் தூதுவர்களுக்கு சம்பந்தன் இதன்போது விளக்கமளித்திருந்தார்.

இந்தநிலையில் குறித்த சந்திப்பு தொடர்பில் எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டில் அரசாங்கம் இல்லை, பிரதமர் இல்லை. புதிய அரசியலமைப்பு திருத்த சட்டத்தினை உருவாக்கும் பணிகளுக்கு தற்போது தடை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலை தொடர்ந்தால் சட்டத்தை பேணுவது மிகவும் கடினமாகும். அதிகாரம் இல்லாத ஆட்சி ஆபத்து. அதிகாரத்தை கைப்பற்ற சிலர் முற்படலாம்.

இவை தொடர்பில் நாம் சர்வதேச சமூகத்திற்கு விளக்கமளித்துள்ளோம். சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நாம் நாட்டின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் விளக்கியுள்ளோம்“ என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று மாலை இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் பிரித்தானியா, பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி, நோர்வே, கனடா, இத்தாலி, தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், தென்கொரியா, அமெரிக்கா, பெல்ஜியம், இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. ஆகியவற்றின் தூதுவர்கள் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்து.

Related Posts