Ad Widget

நாட்டின் ஜனாதிபதியை மக்களே தீர்மானிக்க வேண்டும் – சிவாஜி

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழ் மக்கள், தாங்களாகவே தீர்மானிக்க வேண்டும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவரையும் சுட்டிக்காட்டக்கூடாது எனவும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

sivaji

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

நாட்டின் 7ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 8ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் தொடர்பான முடிவுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் அறிவிக்கவில்லை. மக்கள் தமது தீர்மானத்தின் பிரகாரம் தபால் மூலமான வாக்களிப்பில் வாக்களித்தனர்.

மக்கள் தீர்மானித்துவிட்டனர் தாம் என்ன செய்யவேண்டும் என்று. மீதமுள்ள மக்களும் தீர்மானித்து செயற்படுவார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களில் ஒருவர் வெல்வது உறுதி. இதை யாரும் மறுக்க முயாது. ஆனால் இருவரும் ஒன்றையே கூறுகின்றனர். இந்நிலையில் நாம் ஒருவரை ஆதரிப்பதாக தெரிவிப்போமேயானால், நாம் அவர்களின் கூற்றுக்கு பணிந்துவிட்டோம் என்று சர்வதேசம் கூற ஆரம்பித்து விடும். அதற்கு நாம் இடமளிக்கக்கூடாது.

சர்வதேசம் தனது நிகழ்ச்சி நிரலில் இருந்து விலகிசெல்ல இடமளிக்கக்கூடாது. தமிழ் மக்கள் மடையர்கள் அல்ல. தமது முடிவுகளை தாமே எடுப்பார்கள். இதற்கிடையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது, இத்தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இந்த கருத்துக்கு நான் இணங்குகின்றேன். அது அவர்களின் கருத்து உரிமை அதனால், அவ்வாறு தெரிவித்தனர்.

எனது மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை பொய் பிரச்சாரம் ஆகும். இதனை முற்றாக மறுக்கின்றேன் என அவர் தெரிவித்தார்.

Related Posts