Ad Widget

நவுறுவிலுள்ள இலங்கை அகதிகள் கம்போடியாவில் குடியேற்றப்படுவர்

அவுஸ்திரேலியாவினால் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கையர் உட்பட பல்நாட்டு அகதிகள் நவுறு தீவிலிருந்து கம்போடியாவில் குடியமர்த்துவதற்காக அங்கு அனுப்பப்படவுள்ளனர் என அவுஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் கூறியது.

கம்போடிய தலைநகரான ‘நொம்பென்’ இல் குடியேற்றப்படுவதற்காக முதல் தொகுதி அகதிகள் விசேட விமானத்தின் மூலமாக திங்கட்கிழமை அழைத்து செல்லப்படவுள்ளனர். இதற்கான கம்போடியாவும் அவுஸ்திரேலியாவும் இருபக்க ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

கம்போடியாவுக்கு அனுப்பப்படவுள்ளவர்களில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளனர்.

நவுறு தடுப்பு முகாம்களிலிருந்து வெளியேறுபவர்கள் சுய விருப்புடன் செல்பவர்களாக இருக்க வேண்டுமென இந்த ஒப்பந்தம் கூறுகின்றது.

தாமாக விரும்பி கம்போடியாவில் குடியேறுவோருக்கு கையில் பணம், வங்கியில் பணம், வேலைவாய்ப்பு, கல்வி வசதி, மொழிப்பயிற்சி, ஆரோக்கிய காப்புறுதி என பல சலுகைகள் கிடைக்கும்.

இந்த ஏற்பாட்டின் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு ஆண்டுக்கு 10 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் செலவாகும்.

இதேவேளை, கம்போடியாவுக்கு அகதிகளை அனுப்புவதை மனித உரிமை அமைப்புக்கள் கண்டித்துள்ளன.

Related Posts