Ad Widget

நல்லூர் பிரதேச செயலக விடயத்தில் அத்துமீறிய செயல் எதனையும் நாம் செய்யவில்லை – முதல்வர்

MAYOR -yokeswareyநல்லூர் பிரதேச செயலகத்தினரின் உற்சவ கால பணிமனை அமைப்பதற்கு யாழ். மாநகர சபை அத்துமீறிய செயல் எதனையும் மேற்கொள்ளவில்லை என முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன்போதே மாநகர சபை முதல்வர் மேற்கண்டவாறு சபையில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் உற்சவகாலத்தில் மாநகர சபையே அனைத்து பணிகளையும் செய்வது வழக்கம். எனினும் 2 தடவைகள் பொதுமக்களை அழைத்து நல்லூர் உற்சவம் தொடர்பில் கலந்துரையாடினோம் ஆனால் பிரதேச செயலகத்தினர் வரவில்லை.

அதனையடுத்து இடம்பெற்ற கூட்டத்திற்கு யாழ். மாவட்ட அரச அதிபர் அழைக்கப்பட்டிருந்த வேளை அவர் தனது செயலாளரை அனுப்பியிருந்தார்.

மீண்டும் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற கூட்டத்திற்கு நல்லூர் பிரதேச சபையின் கணக்காளர் சமுகமளித்திருந்ததுடன் தங்களுக்கு ஆலயச்சூழலில் வழங்கப்படும் இடம் தொடர்பிலும் வினாவினார்.

எனினும் ஏற்கனவே பணிமனை அமைக்கப்படுகின்ற இடம் தற்போது உரிமையாளரினால் எடுக்கப்பட்டதுடன் மாநகர சபைக்கு வழங்க மறுப்பும் தெரிவித்து வந்தனர்.

குறித்த இடத்திற்கு பின்னால் உள்ள இடத்தில் பணிமனையினை அமைப்பதற்கு காணி உரிமையாளர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.

எனினும் அந்தக் காணியில் முதலாவதாக மாநகர சபையின் உற்சவகால பணிமனையும் , இரண்டாவதாக நல்லூர் பிரதேச செயலகத்தின் பணிமனையும் மூன்றாவதாக செஞ்சிலுவை சங்கத்தினரின் பணிமனையும் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இருப்பினும் மாநகர சபையிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தங்களுடைய பணிமனையினை அமைத்தமையினால் மாநகர சபை உத்தியோகத்தர்கள் அவர்களுக்கு ஒழுங்கமைப்பு தொடர்பில் தெளிவுபடுத்தியதுடன் போடப்பட்ட கொட்டகையினை அகற்றி பின்னுக்கு போடுமாறும் தெரிவித்தனர்.

ஆனால் ஊடகங்களில் வெளிவந்ததைப் போல மாநகர சபையின் கௌரவத்தை காப்பாற்றுவதனைத் தவிர வேறு எந்த விதமான அத்துமீறிய செயலையும் நாம் செய்யவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts