Ad Widget

நல்லூர் திருவிழாவில் விவசாய அமைச்சின் கண்காட்சி ஆரம்பம்

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு கண்காட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளது.

11

சூழலியல் விவசாயத்தை நோக்கி என்னும் கருப்பொருளில் அமைந்த இந்தக் கண்காட்சியை நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாசாலையின் விளையாட்டுத் திடலில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று சனிக்கிழமை (16.08.2014) திறந்து வைத்துள்ளார்.

1

 

சேதனைப் பசளைகள், மண்இதமாக்கிகள்,யாழ்மாவட்டத்தின் நீர்வளங்கள், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நீர்ப்பாசன முறைகள், விவசாயச்சூழலில் நீர் மாசடைவதைத் தடுக்கும் வழிகள், உயிரியல் முறையில் பீடைகளைக் கட்டுப்படுத்தும் முறைகள், தாவரப் பீடை நாசினிகளின் தயாரிப்பு, அருகிவரும் பாரம்பரிய நெல்இனங்கள், இலை மரக்கறி வகைகளின் முக்கியத்துவம், காளான் வளர்ப்பு போன்ற இன்னும் அநேக சூழலுக்கு நட்பான விவசாயச் செயன்முறைகளை உள்ளடக்கியதாக பொதுமக்களும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் இக்கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

2

 

மேலும், யாழ்கோ நிறுவனத்தின் பால் உற்பத்திப் பொருட்கள், பழமுதிர் சோலை நிறுவனத்தின் பழ உற்பத்திப் பொருட்கள், நல்லின தென்னை, மா, பலா, பப்பாசி போன்ற தாவரங்களின் விற்பனை மையங்களும் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன.

3

 

யாழ் குடாநாட்டில் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் விவசாய இரசாயனங்களால் சூழல் நஞ்சாகி வரும் அதேசமயம் அதிக அளவு நீரை விவசாயத்துக்குப் பயன்படுத்தி வருவதால் நன்னீருக்குப் பாரிய தட்டுப்பாடும் ஏற்பட்டுவருகிறது இவற்றைத் தீர்க்கக் கூடிய வழிமுறைகளைக் காட்சிப்படுத்தியிருக்கும் இக்கண்காட்சியில் விவசாயப் பொது அறிவுப் போட்டிக்கான வினாத்தாள்களும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

9

 

பூங்காவனத் திருவிழாவன்று இரவு விவசாயப் பொதுஅறிவிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமும் மாலை 3மணி தொடக்கம் இரவு 9மணிவரை நடைபெற இருக்கும் இக்கண்காட்சி சப்பறம், தேர், தீர்த்தம், பூங்காவனம் ஆகிய விசேட திருவிழாக்களின்போது காலை 8மணியிலிருந்து இரவு 9மணிவரை நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related Posts