நல்லூர் உற்சவ காலத்தில் அமைக்கப்பட்ட கடைகளில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வாடகைகள் மூலம் யாழ்.மாநகர சபைக்கு 13.7 மில்லியன் ரூபாய் (1 கோடி 37 இலட்சம்) வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்.மாநகர சபை பிரதம கணக்காளர் எல்.தாருகாசன் வியாழக்கிழமை (28) தெரிவித்தார்.
யாழ்.மாநகர சபை ஆட்சிக் காலத்தின் இறுதிக்கூட்டம் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் யாழ்.மாநகர சபை கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை (28) இடம்பெற்று வருகின்றது.
இதன்போது, முதல்வரின் வேண்டுகோளிற்கிணங்க பிரதம கணக்காளர் எல்.தாருகாசன் நல்லூர் உற்சவத்தில் உழைக்கப்பட்ட வருமான விபரத்தை வெளியிட்டார்.
நல்லூர் உற்சவம் கடந்த 1ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரையில் இடம்பெற்றது.
நல்லூர் உற்சவ காலத்தில் ஆலயத்தின் நான்குபுற வீதிகளிலும் கச்சான், மணிக்கடைகள், குளிர்களி, புடைவை, உணவகங்கள், அணிகலன்கள், காட்சியறைகள், ஊக்கப்படுத்தல் நிறுவனங்களின் கண்காட்சி அறைகள் உள்ளிட்ட பல கடைகள் போடப்பட்டன.
போடப்பட்ட கடைகளின் அளவுகள் மற்றும் கடைகளில் விற்கப்படும் பொருட்களின் பெறுமதி ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு பல்வேறுபட்ட வாடகைகள் யாழ். மாநகர சபையால் அறவிடப்பட்டன.
இதன்மூலம் இவ்வருடம் 13.7 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த 2012ஆம் ஆண்டு 9.2 மில்லியன் ரூபாவும், 2013ஆம் ஆண்டு 11.4 மில்லியன் ரூபாவும் வருமானமாகக் கிடைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில், மேற்படி வருமானம் பெறுவதற்கு காரணமாகவிருந்த வரி அறவீட்டாளர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.