Ad Widget

நலன்புரி முகாம் காணிகள் அளவீடு

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள சபாபதிப்பிள்ளை மற்றும் மடிவடி நலன்புரி நிலையங்களின் காணிகள் இராணுவத்தினரின் உதவியுடன் அளவீடு செய்யும் பணிகள் திங்கட்கிழமை (17) முன்னெடுக்கப்பட்டன.

sajeepan

வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து மேற்படி நலன்புரி முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நலன்புரி முகாம் அமைந்துள்ள காணிகளை சொந்த காணிகளாக்கும் நோக்கில் இந்த அளவீடு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இது தொடர்பில் வலி. வடக்கு மீள்குடியேற்ற குழுத்தலைவர் ச.சஜீவன் கருத்துக்கூறுகையில்,

40 பரப்பு நில அளவுள்ள மதவடி நலன்புரி முகாமில் 17 குடும்பங்கள் வசித்து வருவதுடன், 120 பரப்பு நிலஅளவுள்ள சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் 270 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

நலன்புரி நிலைய காணிகளில் வசிப்பவர்களில், சொந்த காணிகள் வேண்டும் என கோரிய குடும்பங்களுக்கு தலா 1½ பரப்பு காணிகள் வீதம் பகிர்ந்தளிப்பதற்காக நிலஅளவீடு செய்யும் பணிகள் திங்கட்கிழமை (17) முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இருந்தும், இந்த நலன்புரி முகாம்கள் அமைந்துள்ள காணிகள் தனிநபர்களுக்கு சொந்தமான காணிகள். அந்த காணிகளுக்கு சொந்தமானவர்களில் பலர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.

அவர்கள் தங்கள் காணிகள் தொடர்பான உரிமங்களை இங்குள்ள (யாழ்ப்பாணத்தில்) தங்கள் உறவினர்களுக்கு எழுத்து மூலம் வழங்கியுள்ளனர்.

அவ்வாறு எழுத்து மூலம் உரிமங்கள் பெற்றவர்கள் காணி அளவீடு செய்ய நலன்புரி நிலையங்களிற்கு சென்ற நிலஅளவையாளர்களிடம் சென்று, இது தங்களுக்கு உரித்தான காணிகள் அவற்றை நிலஅளவை செய்யவேண்டாம் எனக்கேட்டுள்ளனர்.

அதற்கு நிலஅளவையாளர்கள் காணிகளின் உரிமையாளர்கள் வந்தால் மட்டுமே காணி அளவீடுவதை நிறுத்தமுடியும் என கூறியுள்ளனர்.

இதனையடுத்து, நிலஅளவையாளர்களால் நலன்புரி நிலைய காணிகள் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக சஜீவன் மேலும் கூறினார்.

Related Posts