அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தான் ஒரு நிலைப்பாட்டிற்கு வரவேண்டுமானால் அது சரியான முறையில் செயற்படுத்தப்படவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற அனைத்துக் கட்சி தலைவர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைத்தோ அல்லது இலத்திரனியல் முறையைப் பயன்படுத்தியோ வாக்கெடுப்பை நடத்த வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்தார்.
எனவே அத்தகைய நடவடிக்கையே நாட்டின் புத்திஜீவிகள், பொதுமக்கள் மற்றும் சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த முறையாக அமையுமென்று அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தை மாற்றியமைப்பது போன்ற மிக முக்கிய விடயங்கள் தொடர்பில் முடிவுகளை மேற்கொள்ளும்போது நிலையியற் கட்டளைகளில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் குரல் மூலம் பெரும்பான்மையை நிரூபிப்பது சிறந்த முறையாக அமையாதென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.