Ad Widget

நடிகர் சங்கத்தின் ஒற்றுமையை உடைப்பதுதான் விஷாலின் நோக்கம்” சிம்பு ஆவேச பேச்சு

“விஷாலின் சூழ்ச்சி வலையில் சில நண்பர்கள் சிக்கி இருக்கிறார்கள். நடிகர் சங்கத்தின் ஒற்றுமையை உடைப்பதுதான் விஷாலின் நோக்கம்” என்று சிம்பு ஆவேசமாக பேசினார்.

simbu-rathiga-bakkeyaraj

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 18-ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிடுகிறது. சரத்குமார் அணியில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் சிம்பு, சென்னையில் நேற்று மாலை நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

‘‘நடிகர் சங்கம் மீது விஷாலுக்கு உண்மையான அக்கறை கிடையாது. அவருடைய அடிப்படை நோக்கமே நடிகர் சங்கத்தின் ஒற்றுமையை உடைப்பதுதான்.

விஷாலுக்கு பதவி ஆசை. 16 வயதில் இருந்து நான் நடிகர் சங்க கமிட்டியில் உறுப்பினராக இருக்கிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். உண்மையின் பக்கம் இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம். எனக்கு பதவி ஆசை கிடையாது. பதவி எனக்கு தேவையில்லை.

என் சக நடிகர்கள் என்னை விரோதியாக பார்க்கிறார்கள். அதற்கு காரணம் விஷால். சரத்குமார் மீது விஷால் சுமத்தும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக, எஸ்.பி.ஐ. நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தத்தில் எந்த தவறும் இல்லை.

நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக, பழைய கட்டிடத்தை இடிக்கப்போவதாக ஆறு மாதங்களாக சொல்லிக்கொண்டிருந்தபோது, விஷால் எங்கே போனார்? அன்று ஏன் அவர் நடிகர் சங்கம் பக்கம் வரவில்லை? நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில் தியேட்டர் வரக்கூடாது என்கிறார். அப்படியானால், ‘பார்’ வரவேண்டுமா? பக்கத்தில் பள்ளிக்கூடம் இருக்கிறது என்கிறார். அப்படியானால் நடிகர் சங்கம் ‘டாஸ்மாக்’கா?

நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டக்கூடாது என்று பூச்சி முருகன் தொடர்ந்த வழக்கை வாபஸ் வாங்க விடாமல் வைத்திருப்பது யார்?

சரத்குமார் மீது விஷாலுக்கு ‘பர்சனலாக’ பகை. அதற்காக நடிகர் சங்க ஒற்றுமையை உடைக்க முயற்சிப்பதா? என் குடும்பத்தை பிரிப்பதா? உன் உள்நோக்கம் என்ன?

விஷால், ஒரு நரி. அவருடைய சூழ்ச்சி வலையில் நாசர், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் போன்ற நல்ல நண்பர்கள் சிக்கியிருக்கிறார்கள். வருகிற 11-ந் தேதி ராகவேந்திரா மண்டபத்தில் நடக்கும் கூட்டத்தில் அனைத்து நடிகர்-நடிகைகளும் கலந்து கொள்ள வேண்டும்.’’

இவ்வாறு சிம்பு பேசினார்.

கூட்டத்தில், ராதிகா சரத்குமார் பேசியதாவது:-

‘‘நடிகர் சங்கம் தொடர்பாக இன்று நடக்கும் பிரச்சினைகள் வேதனையாக இருக்கிறது. ஒரு நடிகை என்று சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது. எதற்கு இந்த பகை? சி.சி.எல். கிரிக்கெட் அணி தொடங்கியபோது, விஷாலின் தவறான புரிதல் ஆரம்பித்தது.

இனிமேல் அந்த கிரிக்கெட் பக்கம் வராதீர்கள் என்று என் கணவரிடம் நான் கேட்டுக்கொண்டேன். அதில் இருந்து அவர் ஒதுங்கிக்கொண்டார். என்றாலும் ‘கேன்சர்’ மாதிரி பகை வளர்ந்து கொண்டே போனது.

அதன்பிறகு கையெழுத்து வேட்டை ஆரம்பமானது. அதில் முதல் கையெழுத்து போட்டவர், கமல்ஹாசன். அவருடன் போனில் 40 நிமிடங்கள் பேசினேன். அப்போது, ‘‘நான் இந்த அசிங்கத்துக்குள் வர விரும்பவில்லை’’ என்று அவர் கூறினார். நடிகர்களுக்குள் பிரிவு வேண்டாம். ஒரு குடும்பமாக இருப்போம் என்று சிவகுமார் அண்ணன் வீட்டுக்கு போய் பேசினேன். என்னை பார்த்தும் பார்க்காதது போல் கார்த்தி ஓடிப்போய் விட்டார். பாரதிராஜா ஒற்றுமையை ஏற்படுத்த முயன்றார். பிரிவினையை யாரும் விரும்பவில்லை.

விஷால் ரெட்டியையும், கார்த்தியையும் யாரோ தூண்டி விடுகிறார்கள். சங்கத்தை உடைக்காதீர்கள். நாம் எல்லோருமே நண்பர்கள். ஒரு குடும்பம். நமக்குள் பிளவு வேண்டாம். நானும் ஒரு நாடக நடிகருக்கு பிறந்தவள்தான். நாடக நடிகர்களை வேறுபடுத்தி பார்க்காதீர்கள்.’’

மேற்கண்டவாறு ராதிகா சரத்குமார் பேசினார்.

பாக்யராஜ் பேசும்போது, ‘‘நடிகர்களின் குடும்ப ஒற்றுமை குலையக்கூடாது. பிரிவினை வந்து தனித்தனியாக வேலை செய்யும் சூழ்நிலை ஏற்படக்கூடாது. அனைவரும் சேர்ந்து 2 அணிகளுக்கும் இடையே ஒற்றுமை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

நடிகர் மோகன்ராம், நடிகை ஊர்வசி ஆகியோரும் சரத்குமாருக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.

Related Posts