Ad Widget

நகைகளைப் பெற்ற வடக்கு மக்களால் தமக்கு 10 கோடி ரூபா நட்டமாம்! – ரயில்வே ஊழியர் சங்கம்!!

யுத்த காலத்தில் வடபகுதி மக்களால் விடுதலைப்புலிகளின் தமிழீழ வைப்பகத்தில் அடகு வைக்கப்பட்ட தங்க ஆபரணங்களை அவற்றின் உரிமையாளர்களுக்கு மீள ஒப்படைப்பதற்காக வட பகுதியிலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட மக்களுக்கு இலவச ரயில் சேவையை வழங்கியதன் மூலம் இலங்கை ரயில்வே திணைக்களத் துக்கு சுமார் பத்து கோடி ரூபா வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய இலங்கை ரயில்வே ஊழியர்கள் சங்கம் தெரிவித்தது.

இது தொடர்பில் அச்சங்கத்தின் பிரதம செயலாளர் எஸ்.பீ.விதானகே தெரிவித்தவை வருமாறு:-

“வட பகுதியிலிருந்து கொழும்பு கொம்பனித்தெரு வரை இவர்களுக்கு நான்கு ரயில்கள் மூலம் இலவசப் பிரயாணம் வழங்கப்பட்டது.

இவர்களை அழைத்து வருவதற்காக கடந்த மூன்றாம் திகதி மாலை எம்.10 ரக எஞ்சின்களையும் தலா 13 பெட்டிகளையும் கொண்ட நான்கு ரயில்கள் கொழும்பிலிருந்து பளைக்கும், கிளிநொச்சிக்கும் பயணிகள் இல்லாமல் வெற்று நிலையில் அனுப்பப்பட்டன.

அடுத்த நாள் (4ஆம் திகதி) காலை அந்த நான்கு ரயில்களும் பயணிகளுடன் கொழும்பு திரும்பின. நகைகள் வழங்கும் வைபவம் முடிந்ததும் கொழும்பிலிருந்து அன்றைய தினம் இரவு கிளிநொச்சி மற்றும் பளை நோக்கிப் புறப்பட்ட நான்கு ரயில்களும் அங்கு பயணிகளை இறக்கிவிட்டு வெற்று நிலையில் கொழும்பு திரும்பின.

சுமார் 4 ஆயிரம் பயணிகளுக்கு இந்த இலவச ரயில் சேவை வழங்கப்பட்டதன் மூலம் இலங்கை ரயில்வேக்கு சுமார் பத்து கோடி ரூபா நட்டம் ஏற்பட்டது” – என்றார்.

Related Posts