Ad Widget

த.தே.கூ. முடிவெடுக்கவில்லை – சுமந்திரன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையிலும் முடிவெடுக்கவில்லை என்று அக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

sumantheran

இதுதொடர்பில் அவர், விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் மீண்டும் கட்டியெழுப்பவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்ததுடன், இந்த இலக்குகளை அடைவதற்காக நாட்டிலுள்ள மற்றைய முற்போக்கு சக்திகளுடன் இணைந்து செயற்படுவதற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது.

இந்த அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகவே பிரஜைகளின் சக்தி என்ற பொது அமைப்பு, இந்த விடயங்கள் சம்பந்தமாக ஒழுங்கு செய்த கூட்டத்தில் நான் பேசுவதற்கு இணங்கியிருந்தேன். ஆனால், இக்கூட்டத்தில் நான் பங்குபற்றுவது பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்கும் செயலாக சித்தரிப்பதற்கு முயற்சிகள் இடம்பெறுகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக முடிவொன்று எடுக்கப்படாத இந்நேரத்தில், இக்கூட்டத்தை தேர்தல் பிரசாரமாகக் காட்ட முனையும் பின்னணியில், நான் இக்கூட்டத்தில் நேரடியாக பங்குபற்றுவது பொருத்தமற்றது என்று கருதுகின்றேன். எனது இந்த முடிவில் ஏற்பாட்டாளர்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டிருந்தால், அதற்காக மனம் வருந்துகின்றேன்.

எனது சார்பாக வாசிக்கப்படும் செய்தியில் நாட்டின் அனைத்து ஜனநாயக சக்திகளுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிர்ந்துகொள்ளும் பின்வரும் மூன்று விடயங்களை வலியுறுத்துகின்றேன்

1.அதிகாரக் குவிப்பு – ஒரு மையத்தில் அரச அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருப்பதனால், நாட்டு மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புக்களில் மிக மோசமானவற்றை இன்று அனுபவிப்பவர்கள் தமிழ் மக்களே. நிறைவேற்று சட்டவாக்கம், மற்றும் நீதித்துறை உள்ளிட்ட சகல அரச அதிகாரங்களும் ஒரு குடும்பத்தின் கையில் குவிக்கப்படக்கூடாது.

2.பொருளாதாரத்தை தவறாகக் கையாழ்வதாலும், ஊழல் மோசடிகளின் காரணமாகவும் வாழ்க்கைச் செலவு வானளவுக்கு உயர்ந்து உழைக்கும் வர்க்கத்துக்கு மேல் பாரிய சுமையை சுமத்தியிருக்கின்றது.

3.நாட்டில் சட்டம், ஒழுங்கு முற்றுமுழுதாக இல்லாது ஒழிக்கப்பட்டு, குற்றச்செயல்களும் வன்முறையும் தலைவிரித்தாடும் சூழ்நிலை உருவாக்கியிருந்தது. இதற்குப் பொறுப்பானவர்கள் உயர் நிலையிலுள்ள அரசியல்வாதிகளால் பாதுகாக்கப்படுகின்றனர். நாட்டிலே உருவாகும் புதிய அரசியல் சக்தியானது இந்த தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வழிவகைகளை உருவாக்கும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது எதிரணி கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts