Ad Widget

தொண்டர் ஆசிரியர்களுக்கு, நியமனங்கள் கிடைக்காமைக்கு அரசியற் கட்சிகளே காரணம்: வடமாகாண கல்வி அமைச்சர்

வடமாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்கள் பலருக்கு நிரந்தர நியமனம் கிடைக்காமைக்கு அரசியல் கட்சிகள் தான் காரணம் எனவும் அக்கட்சிகள் தமக்கு தெரிந்தவர்களுக்கு நியமனம் பெற்று கொடுத்தமையால் நீண்டகாலமாக சேவையாற்றிய பலர் இன்றும் தொண்டர் ஆசிரியர்களாகவே கடமையாற்றுவதாகவும் வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா புதன்கிழமை (06) தெரிவித்தார்.

Kurukula -rajha-education ministor

நிரந்தர நியமனம் கோரி தொண்டர் ஆசிரியர்கள், வடமாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று புதன்கிழமை (06) முன்னெடுத்தனர்.

அப் போராட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வடமாகணத்தில் போர் நடைபெற்ற காலங்களிலும் சரி, அதன் பின்னரான இன்றைய காலப்பகுதியிலும் பாடசாலைகளில் ஆசிரியர்களை நியமிப்பதில் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றோம்.

கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றோம்.

வடமாகாண பாடசாலைகளில், நீண்டகாலமாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றுபவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதிலும் நாம் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளோம்.

ஏனெனில், அரசியல் கட்சிகள் தமக்கு தெரிந்தவர்களுக்கு வேலைகளை வழங்கியும், மற்றவர்களுக்கு வழங்காமல் இருந்தமையாலும் பலர் இன்று தொண்டர் ஆசிரியர்களாகவே தொடர்ந்தும் கடமையாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு உடனடியாக நிரந்தர நியமனம் வழங்குவதில் பல சிக்கல்கள் உள்ளன என்பதை, தொண்டர்கள் ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வடமாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர்கள் வெற்றிடங்கள் யாவும் நிரப்பபட்டுள்ளன. புதியவர்களை இணைத்து கொள்வதற்கு அரசாங்கத்திடம் இருந்து எங்களுக்கு அனுமதி கிடைக்கப்பெறவில்லை. இது விடயமாக நாங்கள் வடமாகாண சபையிலும் பேசியிருக்கின்றோம்.

அதனடிப்படையில் இப்பொழுது வடக்கில் தொண்டர் ஆசிரியர்களாக இருப்பவர்களின் தரவுகளை சேகரித்து, அவர்களை உதவி ஆசிரியர்களாகவோ, நிரந்தர ஆசிரியர்களாகவோ அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் உள்வாங்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

எம்மால் சேகரிக்கப்பட்ட தரவு பத்திரங்களை, அடுத்த மாதமளவில் மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கவுள்ளோம்.

அதேவேளை, தொண்டர் ஆசிரியர்களை தொடர்ந்து சேவைக்கு அமர்த்துவது சரியானதல்ல. ஏனெனில், பல பட்டதாரிகளும், டிப்ளோமா பட்டதாரிகளும் தங்களுக்கு வேலை வேண்டும் என எமக்கு கோரிக்கைகளை அனுப்பி வைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

அவர்களுக்கும் நாம் வேலை வாய்ப்பை பெற்று கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். எனவே, எதிர்காலத்தில் தொண்டர் ஆசிரியர்களுக்கு வேறு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.

Related Posts