Ad Widget

தொடர்ந்து கொட்டும் மழையால் யாழ்.மாவட்டத்தில் 32 ஆயிரம் பேர் பாதிப்பு!

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக யாழ்.மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 47 குடும்பங்களைச் சேர்ந்த 32 ஆயிரத்து 647 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

malai-2

இதில் 501 குடும்பங்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளன. யாழ். மாவட்டத்தில் உள்ள 11 முகாம்களில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்னர். பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 4 முகாம்களிலும், யாழ். பிரதேச செயலர் பிரிவில் ஒரு முகாமிலும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 2 முகாம்களிலும் சங்கானை, தெல்லிப்பளை, கரவெட்டி, காரைநகர் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் தலா ஒரு முகாமிலும் இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளன.

malai-1

இவர்களுக்கு 3 நாள்களுக்குத் தேவையான சமைத்த உணவையும் உலர் உணவையும் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை, தொடர்ந்து பெய்துவரும் மழைக் காரணமாக சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 790 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் எஸ்.முரளிதரன் தெரிவித்தார். பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காக்கைதீவு, மாதகல் மேற்கு பகுதி மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அவர் மேலும் கூறினார். காக்கைதீவு ஜே – 133 பிரிவிலுள்ள 105 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 11 குடும்பங்கள் இடம்பெயர்ந்து காக்கைதீவு கடற்றொழிலாளர் சங்க கட்டிடத்தில் தங்கியுள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு மூன்று நேர சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறுவர்கள் அதிகளவில் இருப்பதால் நுளம்பு வலைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தமையால் சில இடங்களில் மக்கள் இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாக தகவல் கிடைதுள்ளதாகவும், இருந்தும் எத்தனை பேர் இடம்பெயர்ந்தார்கள் என்ற விபரங்கள் கிடைக்கவில்லை’ எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts