Ad Widget

தேர்தலில் போட்டியிடுவது குறித்து அனந்தி இதுவரை விண்ணப்பிக்கவில்லை

எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட தமிழரசுக்கட்சி அனுமதிக்கவில்லை என்று வடமாகாண சபை அனந்தி சசிதரன் கூறுவது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை என்று தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ். தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நூற்றுக்கணக்கானோர் விண்ணப்பித்திருக்கின்ற நிலையில், அனந்தி சசிதரன் அதற்கான விண்ணப்பத்தை எங்களிடம் ஒப்படைக்கவே இல்லை. இருந்தும் அவர் தன்னை பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை என்று கூறுவது அபத்தமானது.

அத்துடன் சில ஊடகங்கள் முன்பாகவும், வெளிநாடுகளுக்கும் சென்று கட்சியின் தீர்மானத்திற்கு எதிரான கருத்துக்களையும், விமர்சனங்களையும் செய்துவரும் அனந்தி சசிதரனுக்கு எதிராக கட்சியின் தலைமை இதுவரை எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தமிழரசு கட்சியின் உறுப்பினராகவும், மாகாணசபை உறுப்பினராகவும் இருக்கும் அனந்தி சசிதரன், தமிழரசு கட்சியிடம் வேட்பாளர் நியமனம் தருமாறும் கேட்கவில்லை. ஆனால் ஊடகங்களில் தன்னுடைய வேட்பாளர் நியமனத்தை நாங்கள் தடுத்தோம் என கூறிக்கொண்டிருக்கிறார்.

அவருக்காக நாங்கள் வருந்துகிறோம். அவர் தன்னுடைய அனேகமான வேலைகளை ஊடகங்கள் வாயிலாகவே செய்கிறார். மேலும் அனந்தி, தமிழரசு கட்சியின் உறுப்பினர், கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாகாணசபை உறுப்பினரும் கூட. ஆனால் அவர் தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராகவும் செயற்பட்டிருக்கின்றார்.

குறிப்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவ பொம்மையை அனந்தியின் வாகனத்தில் கொண்டுவரப்பட்டே எரிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் செயற்குழுவில் அனந்தி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு கடிதம் அனுப்பப்பட்டபோதும், அவர் அதற்கு பதிலளிக்கவில்லை.

இந்நிலையிலும் நாம் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவோ, அவருடைய மாகாணசபை உறுப்பினர் பதவியை பறிக்கவோ தீர்மானிக்கவில்லை. இந்நிலையில் ஊடகங்களிடம் சென்று தனது நியமனத்தை நாங்கள் தடுத்துவிட்டோம். என கூறுவது ஒத்துக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும். – என்றார்.

Related Posts