Ad Widget

தெல்லிப்பழை வைத்தியசாலையை பொது வைத்தியசாலையாகத் தரமுயர்த்துக! வலி.வடக்கு பிரதேசசபையில் தீர்மானம்

தெல்லிப்ழை ஆதார வைத்தியசாலை நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து மக்களுக்கு பல்வேறுபட்ட சேவைகளை வழங்கிக் கொண்டிருப்பதால் வைத்தியர்கள், தாதியர்கள், மருந்தாளர்கள், மருத்துவ ஆய்வுகூட தொலில்நுட்பவியலாளர், சிற்றூழியர்கள் என பல்வேறுபட்ட ஆளணி பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றது.

vali north 866d

வடமாகாணத்திலேயே புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு, உளநலச் சிகிச்சைப் பிரிவு என்று இருபெரும் அலகுகளைக் கொண்டு இது காணப்படுவதால் எமது இந்த வைத்தியசாலையை பொது வைத்தியசாலையாகத் தரமுயர்த்தவேண்டும். – இவ்வாறு தீர்மானம் ஒன்றை முன்வைத்தார் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கச் செயலாளருமான லயன் சி.ஹரிகரன். வலி.வடக்கு பிரதேச சபையின் டிசெம்பர் மாதத்துக்கான கூட்டம் நேற்று வியாழக்கிழமை பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் தவிசாளர் லயன் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது. சபை அமர்வின்போதே அவர் மேற்கண்ட தீர்மானத்தை முன்வைத்தார்.

இந்தத் தீர்மானத்தை உறுப்பினர்களான கதிரமலைப்பிள்ளை முன்மொழிய, மணிராஜா வழிமொழிய சபையால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு:-

எமது வலி.வடக்கு பிரதேசம் தற்போது துரிதகதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருகின்ற ஒரு பிரதேசம். இங்கு சகல கட்டுமானங்களும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

எமது இந்தப் பிரதேசத்தில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை அமைந்துள்ளமை எமது பிரதேசத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இல்லாத இருபெரும் அலகுகளான உளவளச் சிகிச்சைப் பிரிவும், புற்றுநோய் சிகிச்சைப் பிரிவும் தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் காணப்படுகின்றன.

புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கான விடுதிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஆரம்பத்தில் இருந்தாலும் தற்போது அவை அனைத்தும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுவிட்டன.

அத்துடன், யாழ். பல்கலைக்கழகத்தின் உளநலச் சிகிச்சைப் பிரிவு, புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கான விரிவுரைகள் அனைத்தும் தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலேயே நடைபெற்று வருகின்றன. மகப்பேற்று விடுதியில் மாதத்துக்கு 90 இற்கும் மேற்பட்ட மகப்பேறுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

100 ஐ அண்மித்த வண்ணம் அது உள்ளது. இரத்த வங்கிச் செயற்பாடுகளும் இருக்கின்ற ஊழியர்களை வைத்துக்கொண்டு அதிதுரித வேகத்தில் நடைபெறுகின்றது.

புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு இங்கு செயற்படுவதால் இரத்த வங்கிச் செயற்பாட்டின் தேவையும் அதிகரித்துள்ளது. வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவில் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது ஒரு மீள்குடியேற்றப் பிரதேசம் என்பதால் மக்கள் மீளக்குடியேற குடியேற வைத்தியசாலையில் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தவண்ணம் உள்ளது.

ஆனால், மக்கள் தொகை அதிகரிப்புக்கேற்ப வெளிநோயாளர் பிரிவில் அவர்களைப் பார்வையிடும் வைத்தியர்களின் எண்ணிக்கை போதாமலுள்ளது. தாதியர்களின் எண்ணிக்கை போதாமலுள்ளது. மருந்தாளர்களின் எண்ணிக்கை போதாமலுள்ளது.

தெல்லிப்பழை – அச்சுவேலி வீதி திறக்கப்பட்டால் வலி.கிழக்கு மற்றும் வடமராட்சியைச் சேர்ந்த மக்களும் தெல்லிப்பழை வைத்தியசாலையை நாடவேண்டிய தேவைப்பாடு நிச்சயம் ஏற்படும். புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு நவீனமுறையில் மகரகமவுக்கு இணையாக உருவாக்கப்பட்டு வருகின்றது.

இனிவரும் காலங்களில் வடமாகாணத்தைச் சேர்ந்த மக்கள் புற்றுநோய் மேலதிக சிகிச்சைக்காக மகரகமவுக்குச் செல்லவேண்டிய தேவை ஏற்படாது. வடமாகானத்துக்கு வெளியே அனுராதபுரம், புத்தளம், சிலாபம் போன்ற பிரதேசத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து புற்றுநோய் சிகிச்சை பெறுவதற்கான ஏதுநிலை நிச்சயம் உருவாகும்.

ஆகவே, ஆதார வைத்தியசாலையாகக் காணப்படும் தெல்லிப்ழை ஆதார வைத்தியசாலை நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து மக்களுக்கு பல்வேறுபட்ட சேவைகளை வழங்கிக் கொண்டிருப்பதால் வைத்தியர்கள், தாதியர்கள், மருந்தாளர்கள், மருத்துவ ஆய்வுகூட தொலில்நுட்பவியலாளர், சிற்றூழியர்கள் என பல்வேறுபட்ட ஆளணி பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றது.

வடமாகாணத்திலேயே புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு, உளநலச் சிகிச்சைப் பிரிவு என்று இருபெரும் அலகுகளைக் கொண்டு இது காணப்படுவதால் எமது இந்த வைத்தியசாலையை பொது வைத்தியசாலையாகத் தரமுயர்த்தவேண்டும் – என்று இந்த அவையில் நான் தீர்மானத்தை முன்வைக்கின்றேன் என்றும் இதன் பிரதிகள் மேலதிக நடவடிக்கைக்காக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வட மாகாண சுகாதார அமைச்சர், வடமாகாண முதலமைச்சர், மத்திய சுகாதார அமைச்சர் ஆகியோருக்கும் அனுப்பப்படுதல் வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை – இணுவில் பகுதியில் அமைந்திருக்கும் காங்கேசன்துறை தபாலகத்தை வலி.வடக்கு எல்லைக்குள் மாற்றும் தீர்மானம் ஒன்றையும் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் ஹரிகரன் முன்வைத்தார்.

இந்தத் தீர்மானத்தை உறுப்பினர்களான மயூரதன் முன்மொழிய திருஞானம் வழிமொழிய சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

மாவிட்டபுரம், கீரிமலை என்று பெரும்பாலான பிரதேசங்களில் மக்கள் மீளக்குடியேறியுள்ளனர். இவர்கள் தமக்குரிய தபால்களைப் பெறுவதற்காகத் தினந்தோறும் இணுவில் பிரதேசத்துக்குச் சென்று பெறவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. இதனால் அந்தப் பிரதேச மக்கள் பெரிதும் விசனமடைகின்றனர். தற்போது காங்கேசன்துறை வரை புகையிரதம் செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. காங்கேசன்துறை, தெல்லிப்பழை புகையிரத நிலையங்களும் புனரமைக்கப்பட்டு வருகின்றன. தபாலகம் எமது பிரசேத்தை அண்மித்து அமைந்தால் இரவு மெயிலில் உடனுக்குடன் தபால்களை அனுப்புவதற்கு இலகுவாக இருக்கும்.

ஆகவே, காங்கேசன்துறை உப தபாலகத்தை வலி.வடக்கு பிரதேச எல்லைக்குள் பிரதேச மக்களின் நலனுக்காக உடன் மாற்றியமைக்குமாறு தீர்மானத்தை இந்த அவையின் முன் சமர்ப்பிக்கின்றேன் என்று தெரிவித்தார்.

Related Posts