தெரிவுக்குழுவுக்கு சென்றால் ஏமாற்றப்படுவோம் – த.தே.கூ

selvam-adaikkalanathanநாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு நாம் செல்வோமேயானால் நாம் ஏமாற்றப்பட்டு பள்ளத்தில் தள்ளப்படுவோம் என தமிழ் தேசிக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்க தரப்பால் தெரிவுக்குழு மூலமே தீர்வு என தொடர்ச்சியாக கூறப்பட்டு வரும் நிலையில் தமிழ் தேசிக்கூட்டமைப்பின் இன்றைய நிலை என்ன என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் போச்சுவார்த்தை நடைபெறவேண்டும். அதனூடாக தீர்வை எட்டுகின்றபோது அதனை நாடாளுமன்ற தெரிவு குழுவுக்கு போட்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுமானால் அதனை பரிசீலிப்பதற்கு நாம் தயார் என தெரிவித்திருந்தோம்.

அந்தவகையில் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் போச்சுவார்த்தை இடம்பெறவேண்டுமேயோழிய நாடாளுமன்ற தெரிவுக்குழுவூடாக எமது இனப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கை எமக்கு இல்லை.

ஏனெனில் கடந்த கால தெரிவுக்குழுக்களை பார்க்கின்றபோது அவை அனைத்தும் குப்பைக்தொட்டியில் போடப்பட்ட விடயங்களாகவேயுள்ளது. அதனாலேயே சர்வதேசத்தின் நடுநிலைமையை நாம் நோக்கி நிற்கின்றோம்.

தெரிவுக்குழுவால் சொல்லப்படுகின்ற விடயங்கள் கூட நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. உதாரணமாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கூட நிறைவேற்றப்படவில்லை. ஆகவே எங்கள் கண் முன் நிறையவே அனுபவங்கள் உள்ளது.

இவ்வாறு இருக்கையில் நாம் தெரிவுக்குழுவுக்கு போவோமேயானால் நாம் ஏமாற்றப்பட்டு இன்னும் பின்னோக்கி சென்று எமது இனப்பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் என்ற கோசம் அல்லது அவ் விடயங்கள் எடுபடாமல் போய்விடும் நிலைக்கு சென்றுவிடுவோம்.

தெரிவுக்குழு மூலமாக எம்மை பள்ளத்தில் தள்ளவிடும் செயற்பாட்டையே இந்த அரசாங்கம் செய்ய பார்க்கின்றது. ஆகவே கடைசி வரை தெரிவுக்குழுவுக்கு நாம் செல்லப்போவதில்லை.

இதேவேளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு எக்காலத்திலும் எமது தமிழ் மக்களை அடைவு வைக்கும் செயற்பாட்டில் ஈடுபடாது என்பதுடன் தெரிவுக்குழு மூலம் தீர்வு கிடைக்கும் என்பதனையும் நம்பவில்லை என தெரிவித்தார்.

Related Posts