Ad Widget

தென்னிலங்கை உற்பத்தியாளர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்த சுகாதாரப் பணிமனை சூழ்ச்சி!

தென்னிலங்கையில் உள்ள மிகப்பெரிய கம்பனிகளுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை யாழில் குளிர்பான உற்பத்திகளை நிறுத்தியுள்ளது என யாழ் உப உணவு குளிர்பான உற்பத்தியாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தடை செய்யப்பட்டுள்ள குளிர்பான உற்பத்தியாளர்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் ஆய்வுசெய்து வட மாகாண சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளனர்.

தமக்கு விதிக்கப்பட்ட தடையினை எதிர்த்து போராடுவதற்கு யாழ் உப உணவு குளிர்பான உற்பத்தியாளர்கள் சங்கம் ஒன்றினையும் உருவாக்கியுள்ளனர்.

யாழ் வணிகர் கழகத்தில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் குளிர்பான உற்பத்தியாளர்களின் கலந்துரையாடல்களின் போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த சங்கத்தின் முதலாவது தலைவர் எம்.உதய சிறி தெரிவிக்கையில், யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை எமக்கு விதித்துள்ள தடையானது தென்னிலங்கையிலுள்ள மிகப் பெரிய கம்பனிகளுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் சூழ்ச்சியானதே அன்றி மக்கள் சார்ந்த நடவடிக்கையாக இதனைக் கருத முடியாது.

குளிர்பான நிலையங்கள் முதலில் ஆரம்பிக்கப்படுகின்ற போது பொதுச் சுகாதார பரி சோதகரின் சோதனை மூலம் சுகாதாரம் உறுதிப்படுத்தப்பட்டு பின்னர் மாநகரசபை, பிரதேச சபையினால் அனுமதியளிக்கப்படுகின்றது.

இவ்வாறு சட்டரீதியில் அனுமதியளிக்கப்பட்ட குளிர்பான நிலையங்களினை சுகாதாரப் பணிமனையினர் திடீரென முற்றுகையிட்டு எவ்வாறு தடைசெய்ய முடியும்?.

குளிர்பான நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் ஐஸ்கிறீமில் மலத்தொற்று இருப்பதாகவே சுகாதாரப் பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எமது குளிர்பானங்களில் மலத்தொற்று உள்ளதென்றால் யாழ் மாநகரசபை விநி யோகிக்கும் குடிநீரிலும் யாழ் குடாநாட்டு மக்கள் பாவனை செய்யும் ஒட்டுமொத்த குடி நீரிலும் அல்லவா மலத்தொற்று காணப்பட வேண்டும்? நாமும் யாழ் குடாநாட்டில் இருந்து தான் தண்ணீர் பெறுகிறோம்.

அவ்வாறு எமது குளிர்பானங்களில் நோய்க் கிருமிகள் காணப்பட்டால் அதனைச் சுட்டிக் காட்டி அத்தவறை திருத்திக் கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்படவேண்டும்.

இதனை விடுத்து எவ்வித முன்னறிவித்தலோ கால அவகாசமோ இன்றி தடை செய் தமையானது ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே தென்படுகிறது.

யாழ் மாவட்டத்தில் சுன்னாகத்தில் கழிவு ஓயில் பிரச்சினை, நிலத்தடி நீரில் மலத்தொற்று கலத்தல் என பெரியளவிலான குடிநீர்ப் பிரச்சினைகள் காணப்படுகின்ற போதிலும் அவற்றையயல்லாம் கண்டுகொள்ளாத சுகாதார பணிமனை ஏன் எம்மை மட்டும் இலக்கு வைக்கின்றது.

உலக சுகாதார நிறுவனம், யாழ் மாவட்டத்தில் மலக்கலப்பினால் குடிநீரில் நுண்ணுயிர்த் தொற்று ஏற்படவாய்ப்பு உண்டு என 1985 ஆம் ஆண்டு அபாய அறிவிப்பொன்றினை விடுத்திருந்தது.

எனினும் அதுதொடர்பில் கவனஞ் செலுத்தாதவர்கள் எம்மை வந்து பிடித்து தாம் செயல்படுகின்றோம் என காட்ட முற்படுகின்றனர்.

மலத்தொற்றுள்ள குளிர்பானங்களை உற்பத்தி செய்கிறோம் என்றால் யாழ் மாவட்ட த்தில் உள்ள ஆறு இலட்சம் மக்களும் மலத் தொற்றுள்ள நீரினையே பயன்படுத்துகின்றனர்.

ஆகவே ஒரு சிலரின் முடிவினை வைத்து எம்மைப் பழிவாங்காமல் எமக்கான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts