Ad Widget

தென்னிலங்கை அரசியலுக்காகவே விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படவில்லை : சுரேஷ் பிரேமச்சந்திரன்

தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாகப் பிரகடனம் செய்துள்ள அரசாங்கம், விடுதலைப் புலிகள் மீதான தடையை இன்னமும் நீக்காமல் இருப்பது தென்னிலங்கையில் அரசியல் பிழைப்பு நடத்துவதற்கான குறுகிய அரசியல் நோக்கம் கொண்டதேயன்றி வேறில்லையென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது,

“உரிமைகளைப் பாதுகாக்கவும் அடக்குமுறைகள் ஆக்கிரமிப்புகளிலிருந்து விடுபடவும் உலகெங்கும் ஆயுதப் போராட்டங்கள் உட்பட பல்வேறு வகையான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இவ்வாறு பல்வேறு நாடுகளும் தமது நாட்டை முழுமையாகவோ பகுதியாகவோ ஆக்கிரமிக்க முனைந்த எதிரிநாடுகளுடன் யுத்தங்களில் ஈடுபட்டு தமது நாட்டினைப் பாதுகாக்க உயிர்த்தியாகம் செய்தவர்களை மாவீரர்களாக போற்றி நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டு மக்களால் நினைவுகூரப்பட்டும் மரியாதை செலுத்தப்பட்டும் வருகின்றமை உலக வழக்கமாகும்.

அந்தவகையில் காலனித்துவத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய சுபாஷ் சந்திரபோஸ், வாஞ்சிநாதன், பகத்சிங், சுகதேவ் மற்றும் அகிம்சை வழியில் போராடிய வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணியம் சிவா போன்றவர்கள் கூட காலனித்துவவாதிகளால் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்பட்டார்கள்.

ஆனால், இந்திய மக்களைப் பொறுத்தவரை அவர்கள் அனைவரும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களே ஆவர். மேலும் இலங்கையில் காலனித்துவத்திற்கு எதிரான போராட்டங்கள் பாரிய அளவில் நடைபெறாத போதிலும் காலனித்துவத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் கூட காலனித்துவ ஆட்சியாளர்களால் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டனர்.

மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசு, அவர்களை காலனித்துவத்திற்கு எதிராகப் போராடிய கதாநாயகர்களாக பிரகடனம் செய்துள்ளது.

எந்தவொரு நாட்டிலும் தேசிய இன விடுதலைக்காகப் போராடி உயிர்த்தியாகம் செய்த போராளிகளையும் மக்களையும் நினைவுகூர்வதும் மரியாதை செலுத்துவதும் உலக வழக்கம் மட்டுமல்ல அந்தந்த மக்களின் உரிமையும் கடமையும் ஆகும்.

இதனை மறுதலித்து மாவீரர்தினம் கொண்டாடக்கூடாதென இலங்கை அரசாங்கம் அறிவித்திருப்பதானது உலக நாகரிகத்திற்கு முரணானதும் அடிப்படை மனித உரிமை மீறல்களும் ஆகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாகப் பிரகடனம் செய்துள்ள அரசாங்கம், விடுதலைப் புலிகள் மீதான தடையை இன்னமும் நீக்காமல் இருப்பது தென்னிலங்கையில் அரசியல் பிழைப்பு நடத்துவதற்கான குறுகிய அரசியல் நோக்கம் கொண்டதேயன்றி வேறில்லை.

அத்தகைய தடைச்சட்டம் இருப்பதனாலேயே நீதிமன்றம் மாவீரர்தின நிகழ்வுகளை நடாத்துவதற்கு வரையறைகளை விதிப்பதாகத் தோன்றுகின்றது. இவ்வாறு அரசியலில் ஈடுபடும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளினதும் அரசினதும் போக்குகள் நிறுத்தப்பட வேண்டும்.

அந்தவகையில் தமிழ்த் தேசிய இனம் ஒன்றுபட்டு போராடுவதே மாவீரர்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி” என சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Posts