Ad Widget

தூங்காவனம்’ படம் 14 கோடி ரசிகர்களை திருப்தி செய்யும் – கமல்ஹாசன்

‘தூங்காவனம்’ படம் தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் 14 கோடி ரசிகர்களை திருப்தி செய்யும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

thoongavanm-Kamal-Haasan-Speech_SECVPF

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள படம், ‘தூங்காவனம்’. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் திரிஷா, மதுஷாலினி, பிரகாஷ்ராஜ், யூகி சேது, கிஷோர், சந்தானபாரதி, ஜெகன், உமா ரியாஸ்கான், ஆஷா சரத் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ராஜேஷ் எம்.செல்வா டைரக்டு செய்திருக்கிறார். படத்தின் ‘டிரைலர்’ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் படம் பார்க்கிறவர்கள் மொத்தம் 14 கோடி பேர் இருக்கிறார்கள். 2 மொழி ரசிகர்களையும் ‘தூங்காவனம்’ படம் திருப்தி செய்யும்.

2 மொழிகளிலும் படம் செய்வது சுலபம் அல்ல. நான் ஏற்கனவே இதுபோல் 2 மொழிகளில் 24 படங்களில் நடித்திருந்தாலும் எப்படி சுலபமாக படம் செய்வது? என்பதை இந்த படத்தில் கற்றுக் கொண்டேன்.

ஒரு படத்தை தயாரிப்பது சுலபம். அதில் திட்டமிடுதலும் திறமையுடன் செயல்படுவதும் தான் முக்கியம். அதற்கு நல்ல ஆட்கள் தேவை. இந்த படத்தில் எனக்கு அப்படி ஒரு நல்ல அணி அமைந்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் இனிமேல் வேகம்-உத்வேகத்துடன் நிறைய படங்களை தயாரிக்கும். ‘தூங்காவனம்’ படம் முடிவடைந்ததும், அடுத்த படத்துக்கான வேலையை தொடங்கி விட்டோம்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

‘தூங்காவனம்’ படத்தில் உடை அலங்கார நிபுணராக பணிபுரிந்த நடிகை கவுதமி பேசும்போது, ‘‘இந்த படத்தில் வேறு ஒரு திரிஷாவை பார்க்கலாம். அவரது நடிப்பு பாராட்டும்படி அமைந்துள்ளது. அவருடைய உடை அலங்காரமும் முற்றிலும் மாறுபட்டிருக்கும்’’, என்றார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் பேசும்போது, ‘‘கமலுடன் பணிபுரிவது அற்புதமான தருணங்கள். நான் ஏற்கனவே அவருடன் 2 படங்களில் பணிபுரிந்திருக்கிறேன். இந்த படத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக அவருடன் பயணம் செய்திருக்கிறேன். எனக்கும், அவருக்கும் டைரக்டர் கே.பாலசந்தர் தான் குரு. பாலசந்தரின் மறைவுக்கு பின், கமல்ஹாசனுக்கு பொறுப்பு அதிகமாகிவிட்டது’’, என்று கூறினார்.

நடிகை திரிஷா பேசும்போது, ‘‘எந்த நடிகையாக இருந்தாலும் கமல்ஹாசனுடன் நடிப்பதை பெருமையாக கருதுவார்கள். நான் ஏற்கனவே ஒரு படத்தில் அவருடன் நடித்துவிட்டேன். 2-வது முறையாக அந்த சந்தர்ப்பம் அமைந்ததற்காக பெருமைப்படுகிறேன்’’, என்றார்.

விழாவில் பட தயாரிப்பாளர்கள் சந்திரஹாசன், ஜார்ஜ் பயஸ், சித்தாரா சுரேஷ் பாலாஜி, இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் சானு, வசன கர்த்தா சுகா, ஸ்டண்டு மாஸ்டர் ரமேஷ், நடன அமைப்பாளர் ஷோபி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

Related Posts