Ad Widget

துஸ்பிரயோகங்கள் தொடர்பில் பெற்றோருக்கு அதிக கடப்பாடுகள் – பொறுப்பதிகாரி

சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுவதை கட்டுப்படுத்துதற்கு பெற்றோர்களே அதிக கடப்பாட்டுடன் செயற்படவேண்டும். சிறுவர்களை துஸ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பது பெற்றோர்களின் கைகளில் உள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி றொஹான் மகேஷ் தெரிவித்தார்.

இது தொடர்பில் பொறுப்பதிகாரி மேலும் தெரிவிக்கையில்,

பெற்றோர்களே தமது பிள்ளைகளின் முதலாவது நண்பர் ஆவார்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் எதிர்காலம் தொடர்பில் அக்கறை கொண்டவர்கள். ஆகவே பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் பெற்றோர்கள் கவனம் செலுத்தவேண்டும்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் ஏனைய பொலிஸ் பிரிவுகளைவிட மிகக்குறைவாகவே காணப்படுகின்றன. மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளிலும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

அத்துடன், மாதந்தோறும் இடம்பெறும் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, அதில் கலந்துகொள்ளும் பெற்றோர்களுக்கு அறிவூட்டும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இதன்மூலம் எமது பொலிஸ் பிரிவில் 80 வீதமான அளவிற்கு சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம்.

யாழ்.மாவட்டத்திலுள்ள சிறுவர்களிடம் தொலைபேசி பாவனை அதிகரித்துள்ளமையே, சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் ஆகும். பெற்றோர்கள் ஒன்றை கவனத்தில் எடுக்கவேண்டும். உங்கள் பிள்ளைகள் தொலைபேசியில் உரையாடும் போது, அவர்கள் யாருடன் உரையாடுகின்றனர், என்ன உரையாடுகின்றனர் என்பதை அவதானிக்க வேண்டும்.

அத்துடன், பிள்ளைகள் தொலைபேசியில் என்ன பார்க்கின்றார்கள் என்பது தொடர்பிலும் அவதானமாக இருக்கவேண்டும். பிள்ளைகள் சரியான முறையில் நடந்துகொண்டாலும் பிற சூழல் காரணிகள் பிள்ளைகளை துஸ்பிரயோகத்துக்கு ஆளாக்குகின்றன. பெண் பிள்ளைகள் மட்டும் தான் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகின்றார்கள் என்று எண்ணக்கூடாது. ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளுக்கு நிகராக துஷ்பிரயோகத்துக்கு ஆளாகும் சம்பவங்கள் யாழ் மாவட்டத்தில் அதிகம் இடம்பெற்று வருகின்றன.

அவை ஊடகங்களில் வெளிவருவதில்லை. ஊடகங்கள் அனைத்தும் பெண்பிள்ளைகள் துஷ்பிரயோகத்துக்கு ஆளாவதனை மட்டுமே செய்திகளாக வெளியிடுகின்றன. பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லும் போதும், வரும் போதும் சக மாணவர்களுடன் ஒன்றாக தமது பிள்ளைகளை பெற்றோர்கள் அனுப்பவேண்டும். அத்துடன், பிள்ளைகளை வீட்டில் தனியாக விட்டு செல்லாமல், நம்பிக்கையான பெரியவர்களுடன் பிள்ளைகளை விட்டுவிட்டு செல்லவேண்டும் என பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

Related Posts