Ad Widget

தீவகத்துக்கான குடிதண்ணீர் விநியோகக்குழாய் சேதம் குடிக்க நீரின்றி மக்கள் தவிப்பு!

save- waterதீவகப் பிரதேசங்களுக்கான குடிதண்ணீர் விநியோகக் குழாய் சேதமடைந்ததால் நான்கு நாட்களாக குடிதண்ணீர் இல்லாது அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர் என்று கூறப்படுகின்றது.

இந்த விடயம் குறித்து மேலும் அறிய வருவதாவது:-

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அல்லைப்பிட்டியில் இருந்து தீவகப் பகுதிகளுக்கு குடிதண்ணீரை விநியோகித்து வருகின்றது.

நீர்ப்பற்றாக்குறை காரணமாக ஒன்றுவிட்ட ஒருநாளில் அரை மணி நேரமே இப்பகுதிகளில் நீர் விநியோகம் இடம்பெற்றுவருகின்றது.

இதனால் மக்கள் ஏற்கனவே குடிதண்ணீர் பிரச்சினையை எதிர்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அரலிச்சந்தியில் வீதித் திருத்தப் பணி இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது நீர் விநியோகக் குழாய் உடைவுற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் தீவகப் பகுதிக்கான குடிதண்ணீர் விநியோகம் முற்றாகத் தடைப்பட்டது.

இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குடிதண்ணீர் விநியோகம் இலாததால் பெரும்பாலான மக்கள் போத்தலில் அடைக்கப்பட்ட நீரையே சார்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

எனினும் தனியார் நிறுவனம் ஒன்று பௌசர் மூலமாக குடிதண்ணீரை விநியோகிக்கின்ற போதிலும் அதன் தூய்மை குறித்தும் மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதனை சுகாதாரப் பகுதியினர் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதேவேளை குடி தண்ணீர் விநியோகக் குழாய் உடைவுற்று மூன்று நாட்களின் பின்னரே அதனைத் திருத்தும் பணியை நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் ஆரம்பித்தனர் என்றும் அதுவும் மந்த கதியிலேயே அந்தத் திருத்தப்பணிகள் இடம்பெறுகின்றன எனவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

Related Posts