Ad Widget

தீவகத்தில் காணாமற்போனவர்கள் மண்டைதீவு கிணறுகளில் போடப்பட்டனர்!

யாழ்.தீவக பகுதிகளில் கடத்தப்பட்டவர்கள் கொலை செய்ப்பட்டு மண்டைதீவுப் பகுதியில் உள்ள 3 கிணறுகளில் போடப்பட்டிருக்கலாம். ஒரு கிணறு தோண்டப்பட்டபோது 85 மனித உடல் எச்சங்கள் மீட்கப்பட்டன மற்றைய கிணறுகளை தோண்டுவதற்கு அரசாங்கம் மறுத்துவிட்டது. அவற்றையும் தோண்டுங்கள் பல உன்மைகள் தெரியும்.

மேற்கண்டவாறு காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வேலுப்பிள்ளை பேரின்பநாயம் என்பவர் சாட்சியம் வழங்கியுள்ளார்.

ஆணைக்குழுவின் 2ஆம் அமர்வுகள் நேற்று வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்றிருந்தது. இவ் அமர்விலேயே குறித்த சாட்சி வழங்கப்பட்டது.

வேலுப்பிள்ளை பேரின்பநாயகம் தனது சாட்சியத்தில் மேலும் குறிப்பிடுகையில், 1990ம் ஆண்டு அல்லைப்பிட்டி பள்ளிவாசலுக்கு அருகில் காலையில் நாங்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்வதற்காக சென்றிருந்தோம். நானும் எனது அத்தானும், அத்தானுடைய மகனும் சென்றிருந்தோம். அப்போது படையினர் வீதியில் நின்றிருந்தார்கள். அவர்கள் அத்தானுடைய மகன் தே.சாந்தலிங்கத்தை அழைத்து சற்று தூரம் அழைத்துச் சென்று விசாரித்துவிட்டு பிடித்துச் சென்று விட்டார்கள். அதன் பின்னர் அவர் தொடர்பான எந்தவொரு தகவலும் எமக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் தீவகத்தில் 1990ம் ஆண்டு தொடக்கம் கடத்தப்பட்டவர்கள், காணாமல்போனவர்கள், படையினரால் பிடிக்கப்பட்டவர்கள்

என பலர் மண்டைதீவு பகுதியில் உள்ள 3 கிணறுகளில் கொல்லப்பட்டு போடப்பட்டதாக தகவல்கள் இருக்கின்றன. இந்த கிணறுகளில் 2 கிணறுகள் மண்டைதீவு முதலாம் கட்டை தோட்டவெளி பகுதியிலும் ஒரு கிணறு மண்டைதீவு வேதக்கோவிலடியிலும் இருக்கின்றது. இந்த 3 கிணறுகளில் ஒரு கிணற்றை கொஞ்சக் காலத்திற்கு முன்னர் தோண்டினார்கள் அப்போது அந்தக் கிணற்றிலிருந்து 85 வரையான மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டன.

அதற்குப் பின்னர் அந்தக் கிணறு தோண்டுவதை நிறுத்திவிட்டார்கள். அரசாங்கமே அதனை நிறுத்தியதாக கூறப்படுகின்றது. எனவே தோண்டப்படாமல் இருக்கின்ற மீதி கிணறுகளையும் தோண்டுங்கள் அதன் பின்னர் பல உண்மைகள் தெரியவரும் என தன்சாட்சியத்தில் பேரின்பநாயகம் குறிப்பிட்டார்.

Related Posts