Ad Widget

திருமலை மாணவர்கள் படுகொலை: சாட்சியாளர்களை தேடுவதற்கு உத்தரவு

திருகோணமலையில் பாதுகாப்புப் படையினரால் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சாட்சியாளர்கள் வெளிநாடு சென்றுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்களுடன் தொடர்புகொண்டு அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பாதிக்கப்பட்ட தரப்பின் இரு சாட்சியாளர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணி டிலான் ரத்னாயக்க நீதிமன்றிற்கு அறிவித்தார்.

அத்தோடு, சாட்சிகளை நெறிப்படுத்துவதற்கான கால அவகாசத்தையும் கோரியதையடுத்து நீதவான் எம்.எச்.எம்.ஹம்சா மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

கடந்த 2006ஆம் ஆண்டு திருகோணமலை கடற்கரையில் 21 வயது நிரம்பிய மனோகரன் ரஜீகர், யோகராஜா ஹேமசந்திரா, லோஹிதராஜா ரோகன், தங்கத்துரை சிவானந்தா, சண்முகராஜா கஜேந்திரன் எனும் ஐந்து மாணவர்கள், அங்கு நிலைகொண்டிருந்த விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக சாட்சிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts