Ad Widget

திருட்டு வி.சி.டி.க்கு எதிராக அடுத்த மாதம் 2-ந்தேதி நடிகர்-நடிகைகள் பேரணி

திருட்டு வி.சி.டி.க்கு எதிராக நடிகர்-நடிகைகள் பங்குபெறும் ஊர்வலம் டிசம்பர் 2-ந் தேதி சென்னையில் நடக்கிறது.

dvd-cinema

தமிழ் திரைப்பட கூட்டமைப்பு கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது.

இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், செயலாளர்கள் சிவா, ஞானவேல்ராஜா, துணைத்தலைவர்கள் முரளிதரன், டி.வி.தியாகராஜன், பொருளாளர் ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, வினியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி, பெப்சி தலைவர் சிவா, டைரக்டர்கள் சங்க செயலாளர் ஆர்.கே.செல்வமணி, நடிகர்கள் விஷால், பார்த்திபன், ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் திருட்டு வி.சி.டி.யால் திரையுலகில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* தமிழ் திரைப்படங்களில் வெளியீடு முறைப்படுத்தப்படாமல் இருப்பதால் சிறு முதலீட்டு பட தயாரிப்பாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். ஆகவே இனி குறிப்பிட்ட 10 நாட்களில் மட்டுமே பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் மற்றும் பெரிய பட்ஜெட்டில் தயாரித்த படங்களை திரையிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதை முறைப்படுத்த ஒவ்வொரு அமைப்பில் இருந்தும் 6 பேரை பிரதிநிதியாக கொண்ட குழு அமைக்கப்படும்.

* திருட்டுத்தனமாக வெளியிடப்படும் படங்களை பார்க்கவும், பதிவிறக்கம் செய்யவும் துணைபுரியும் வலைத்தளங்களை முடக்க மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் முறையீடு செய்வது மற்றும் சட்டரீதியாக அவைகளை முடக்க போராடுவது.

* தமிழ் திரையுலகை காக்கவும், திருட்டு வி.சி.டி.யை ஒழிக்கவும் குண்டர் சட்டத்தை அமலுக்கு கொண்டுவந்த ஜெயலலிதாவுக்கு இந்த குழு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

* மீண்டும் திருட்டு வி.சி.டி.க்கள் தலையெடுத்து தமிழ் சினிமாவை அழித்து வருகின்றன. இதை நம்பி உள்ள தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், நடிகர்-நடிகைகள் எந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இவர்கள் அனைவரும் கலந்துகொள்ளும் பேரணி ஒன்றை டிசம்பர் 2-ந் தேதி அன்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணி முடிவில் திரையுலக பிரதிநிதிகள் முதல்-அமைச்சரை சந்தித்து மனு கொடுக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.

* திருட்டு வி.சி.டி. விற்பவர்களை அடையாளம் கண்டு காவல்நிலையத்தில் புகார் செய்ய வேண்டுமென ரசிகர்களை கேட்டுக்கொள்ளும்படி ரஜினிகாந்த், கமலஹாசன் முதல் இன்று அறிமுகமாகி உள்ள கதாநாயகர்கள் வரை இந்த குழு கோரிக்கை வைக்கிறது.

* திருட்டு வி.சி.டி.யை எடுக்க பயன்படும் திரையரங்கங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று முடிவெடுக்கப்படுகிறது.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Related Posts