Ad Widget

தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையில் கப்பல் சேவை!

தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் சபரி மலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது எனவும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொம்பனித்தெரு ஸ்ரீ ஹரி ஹர சுதன் ஐயப்ப யாத்திரைக் குழுவினருக்கும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அமைச்சு, விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய நுழைவுக்கட்டணம் (விசா) இன்றி இலவசமாகப் பயணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு, ஐயப்ப யாத்திரைக் குழுவினர் விடுத்த கோரிக்கையினையும் நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பௌத்த மக்கள் புத்தகயாவுக்கு புனித யாத்திரைப் பயணமாக செல்வதைப் போன்று, இஸ்லாமியர்கள் புனித மக்கா நகருக்குச் செல்வதைப் போன்று, சபரி மலைக்கு புனித யாத்திரை சென்று வருவதற்கு அங்கிகாரமும், இலகுவான வழிமுறைகளும் ஏற்படுத்தித் தருவதற்கு உதவி செய்யவேண்டும் என்றும் அந்தக் குழுவினர் கோரிக்கை விடுத்திருந்தனர்..

அவர்களது கோரிக்கையின் நியாயத்தைப் புரிந்து கொள்வதாகவும், இது தொடர்பில் விசேட அமைச்சரவைப் பத்திரமொன்றையும் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதேவேளை, தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்குமிடையே கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Posts