Ad Widget

நல்லெண்ணத்தை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும்படி யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு கோரிக்கை!

அண்மைக்காலமாக ஆட்சியாளர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அடக்குமுறைகளையும் மக்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்களையும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வன்மையாகக் கண்டித்துள்ளது.இவ்வாறான தாக்குதல்களால் அரசியல் தீர்வு கேள்விக்குறியாக உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கார்த்திகைத் தீபமேற்றுவதற்குத் தடையெதுவுமில்லையென்றும் இந்துக்கள் தமது சமயக் கடமைகளை எதுவித அச்சமுமின்றி நிறைவேற்றலாம் என்றும் யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிவித்திருந்ததை அடுத்து, பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சிட்டி விளக்குகளை ஏற்றி கார்த்திகைத் தீபத்திருநாளைக் கொண்டாடினர்.

அப்போது பல இடங்களில் இராணுவத்தினர் வந்து விளக்குகளைக் கொளுத்தக்கூடாதென எச்சரித்து, விளக்குகளை அணைத்துள்ளனர். சில இடங்களில் உந்துருளிகளில் வந்த “மர்ம நபர்கள்’ சிட்டி விளக்குகளைத் தட்டி வீழ்த்தி அச்சுறுத்தும் பாணியில் செயல்பட்டும் உள்ளனர்.

அத்துடன் 27.11.2012 அன்று பல்கலைக்கழக வளாகத்தினுள் இராணுவத்தினர் மாணவர், மாணவியரின் விடுதிகளுள் புகுந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளமையையும் பின்னர் 28.11.2012 அன்று காலை அமைதியாகச் சென்ற மாணவர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மேற்கொண்டமையையும் அங்கு வந்த பத்திரிகையாளர்கள் மீதும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் மீதும் தாக்குதல் மேற்கொண்டமையையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இதுபோன்ற தொடர் செயற்பாடுகள் மக்களின் நல் எண்ணத்தைப் பெற எவ்விதத்திலும் உதவப்போவதில்லை. ஏற்கனவே அரசு தாம் முன்னெடுப்பதாகச் சொல்லும் இனப்பிரச்சினைக்கான தீர்வின் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள சந்தேகங்கள் இதுபோன்ற செயற்பாடுகளால் மேலும் உறுதி அடைகின்றன.

தமிழ் மக்களின் நல்லெண்ணத்தை வென்றெடுப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடும்படி ஆட்சியாளரையும் இராணுவத்தையும் பொலிஸாரையும் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.

Related Posts