Ad Widget

தமிழ் மக்களின் இருப்பை இல்லாமல் செய்ய புதிய அரசு சதி – சுரேஸ் எம்.பி

தமிழ் மக்களின் இருப்பை இல்லாமல் செய்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்றது போல தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலும் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் நடைபெறுகின்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,

‘இஸ்ரேலிய அரசாங்கம் பலஸ்தீனத்தில் யூத குடியேற்றங்களை செய்து பலஸ்தீன மக்களை சிறுபான்மையினர் ஆக்கி, அங்கிருந்து அவர்களை விரட்டி அடித்தனர். திபெத்தில் சீனர் குடியேறி திபெத்தியர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர்.

அதேபோன்று, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பகுதியில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்று தமிழ் மக்களை சிறுபான்மையினமாக்கி விரட்ட முனைகின்றனர். தமிழ் மக்களின் உரிமைகளுக்கு போராடியவர்கள் இளைஞர்களும், மாணவ சமூகமுமே ஆரம்ப கால கட்டத்தில் மாணவ பேரவை, பல்கலைகழக மாணவர்கள் போன்றோரே ஈழ விடுதலை போராட்டத்தில் முன்னணி பங்குகளை வகித்தவர்கள்.

மாணவ சக்தி மாபெரும் சக்தியாக வளர்ந்து வந்திருந்தன. தற்போது அந்த மாணவ சக்தியையும் இளைஞர் சக்திகளையும் இல்லாதொழிப்பதற்காக யுத்தத்துக்கு பிற்பாடு நிச்சயமாக இராணுவம் பல காரியங்களை செய்து வருகின்றது. விளையாட்டு போட்டிகளில் மதுபானங்கள், பரிசில்களாக வழங்கப்பட்டன. போதைவஸ்து பாவனையும் இராணுவத்தின் ஊடாக யாழில் உருவாக்கியுள்ளனர். ஒன்றரை இலட்சம் இராணுவம் இங்கே நிலைகொண்டுள்ளனர்.

இளைஞர்களை அவர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து போதைவஸ்துக்களை பாவனை செய்ய வைக்கின்றனர். போராட்ட காலத்திலும் அதற்கு முற்பட்ட காலத்திலும் இவ்வாறன போதைவஸ்து பாவனை இல்லை. இப்போது தான் அவை பாவனைக்கு வந்துள்ளன.

பாடசாலை மாணவர்கள் மட்டத்திலும் இளைஞர்கள் மட்டத்திலும் தான் இவை ஊடுருவி உள்ளது. இது நிச்சயமாக திட்டமிட்ட செயல் ஆகும். இலங்கை தமிழ் மக்களின் சக்திகளை போதைவஸ்து மூலம் அடிமையாக்கி தமிழ் சமூகத்தை முற்றுமுழுதாக அழிக்கும் செயற்பாடாகவே நாங்கள் இதனை பார்க்கின்றோம்.

தற்போது அரசாங்கத்தின் புள்ளி விபரத்தின் அடிப்படையில், வடமாகணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் மது பாவனையும் கூடுதலாக உள்ளது. இந்த அளவுக்கு சமுதாயம் சீரழிந்து போனது என்பது சாதரணமான விடயம் இல்லை. இதற்கு எதிராக பாடசாலை மாணவர்கள் மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

இளைஞர்களையும், மாணவர்களையும் அவர்களுக்கான கல்வியினை ஆலோசனைகளை புகட்டி நல்வழிப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு பல்கலைகழக மாணவர்களுக்கு உண்டு. இதனை இலங்கை அரசாங்கம், இராணுவம் என்பன திட்டமிட்டு செய்கின்றது என்பதனை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சீனா, வியட்நாம் போன்ற நாடுகளிலும் இவ்வாறான நடவடிக்கைகள் எடுகப்பட்டன. அவற்றின் மூலமே அந்த நாட்டின் மக்களை அடிமைப்படுத்தினார்கள். அதேபோன்றே தமிழ் மக்களையும் அடிமைப்படுத்தி தமிழ் சமுதாயத்தை அழிக்க எடுக்கப்படும் நடவடிக்கை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எவ்வாறு சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டு தமிழ் மக்களின் இருப்பை அழிக்கின்றார்களோ அதேபோன்று போதை பொருள் பாவனையினை கொண்டு தமிழ் மக்களை சீரழிக்க போகின்றார்கள் என்பதனை கவனத்தில் கொண்டு அதனை தடுக்க சகல வழிகளும் போராட வேண்டும்’ என்றார்.

Related Posts