தமிழ் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்!

தமிழர்களின் அழிவுக்கு வழிவகுத்தது தமிழ் தலைமைகள்தான் என முன்னாள் வட.கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புலிகளின் பெயரைச் சொல்லி தங்களுடைய பதவிகளைக் காப்பாற்றிவரும் இவர்கள் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்காக எந்த முயற்சியினையும் ஏற்படுத்தாதவர்கள்.

நான்கு வருடமாக அபிவிருத்தி பற்றி பேசமாட்டோம் உரிமைகள் கிடைக்காது என்று கூறிவிட்டு தற்போது உரிமை கிடைத்தது போல ஓடித் திரிகின்றார்கள்.

அமைச்சர்கள் வந்தால் பின்னாலும், முன்னாலும் போய் நின்று படமெடுக்கிறார்கள். நாங்கள் பிழைவிட்டு விட்டோம் மன்னித்துகொள்ளுங்கள் என்று மக்களிடம் கூறவேண்டியதுதானே.

அதனைவிடுத்து மக்களைப் பொய்கூறி ஏமாற்றி வருகின்றார்கள். அரசோடு நின்றால் துரோகி அமைச்சர்களுடன் நின்றால் ஒட்டுக்குழு என்று கூறிவிட்டு அண்மைய நாட்களில் எங்கு போய் தமிழ்த்தலைமைகள் நிற்கின்றார்கள்?

இந்தியாவுடன் எங்களுக்கு வெறுப்பு இந்தியா எங்களுக்கு உதவி செய்யாது என்றால் தமிழ் தலைவர்கள் இந்தியாவே உன் உதவி எங்களுக்கு தேவையில்லை என்று கூறவேண்டியதுதானே? இது யாரை ஏமாற்றுவதற்கு? தமிழர்களே தமிழர்களை ஏமாற்றுகின்றனர்.

எனவே புதிய சிந்தனைகளை நோக்கி நகரவேண்டிய தேவை எழுந்துள்ளது. பழைய விடயங்களையும் புதிதாக சிந்திக்கவேண்டும். இது முன்னேற வேண்டிய சமூகம் அதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன.

எனவே முற்போக்கான மாற்றங்களையும், முன்னேறுவதற்கான மாற்றங்களையும், புதிய சிந்தனைகளையும் நோக்கி நாங்கள் செயற்படவேண்டும்.

அதற்கு இவ்வாறான புத்தகங்கள் வெளிவருவது அவசியமானதுடன், யதார்த்தபூர்வமாக முன்னோக்கி செலுத்துகின்ற எழுத்துக்கள் மேலும் படைக்கப்பட வேண்டும்” என வரதராஜப் பெருமாள் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts