Ad Widget

தமிழ் ஊடகவியலாளர்களை ஒருபோதும் அடிபணிய வைக்க முடியாது! – சுரேஷ் எம்.பி

“தமிழினத்தின் அவலங்களை வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்டும் தமிழ் ஊடகவியலாளர்களை மிரட்டி – அச்சுறுத்தி அவர்களை ஒருபோதும் அடிபணிய வைக்க முடியாது. இதனை இலங்கை அரசும், அதன் படைகளும் புரிந்துகொள்ள வேண்டும்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

suresh

“தமிழ் ஊடகவியலாளர்கள் எதற்கும் அடிபணியாமல் தமது பணிகளை துணிகரமாகச் செய்த காரணத்தால்தான் அரசினதும் அதன் படைகளினதும் மோசடிகளும், மனித உரிமை மீறல்களும் வெளி உலகிற்கு அம்பலமாகியுள்ளன.

இதனால்தான் சர்வதேச சமூகத்தின் பொறிக்குள் இலங்கை அரசு சிக்கித் தவிக்கின்றது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஓமந்தையில் கஞ்சா என்ற பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி யாழிலிருந்து ஊடகப் பயிற்சிப்பட்டறைக்காக கொழும்பு சென்ற தமிழ் ஊடகவியலாளர்களை சிறையில் தள்ள அரச படைகள் முயற்சித்தன. இந்த மிரட்டல் நடவடிக்கை தோற்றுப்போக மறுநாள் கொழும்பில் நடைபெறவிருந்த ஊடகப் பயிற்சிப்பட்டறையை இனவாதக் கும்பலை ஏவிவிட்டு அரசு குழப்பியடித்தது.

எனினும், தமிழ் ஊடகவியலாளர்கள் அஞ்சவில்லை. இந்தச் சம்பவங்களையடுத்து தமிழ் ஊடகவியலாளர்களுக்காகக் குரல் கொடுத்த அமெரிக்காவைக் கண்டித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள மோசமான அறிக்கையிலும், வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகத் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்த கருத்துகளிலும் தமிழ் ஊடகவியலாளர்கள் மறைமுகமாக மிரட்டப்படுகின்றனர் என்பது புலனாகின்றது.

எனவே, தமிழினத்தின் அவலங்களை வெளி உலகத்திற்கு எடுத்துக் காட்டும் தமிழ் ஊடகவியலாளர்களை மிரட்டி அச்சுறுத்தி அவர்களை ஒருபோதும் அடிபணியவைக்க முடியாது.

இதனை இலங்கை அரசும், அதன் படைகளும் புரிந்துகொள்ள வேண்டும். யுத்த காலத்திலும் சரி, அதன் பின்னரும் சரி தமிழ் ஊடகவியலாளர்கள் அரசின் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தமது பணிகளைச் செய்து வருகின்றனர்.

இவர்கள் எதற்கும் அடிபணியாமல் தமது பணிகளை துணிகரமாகச் செய்த காரணத்தால்தான் அரசினதும் அதன் படைகளினதும் மோசடிகளும், மனித உரிமை மீறல்களும் வெளி உலகிற்கு அம்பலமாகியுள்ளன. இதனால்தான் சர்வதேச சமூகத்தின் பொறிக்குள் இலங்கை அரசு சிக்கித் தவிக்கின்றது” – என்று தெரிவித்துள்ளார் சுரேஷ் எம்.பி.

Related Posts