Ad Widget

தமிழ் இராணுவத்தினரும் முதற்கட்ட பயிற்சியை முடித்து வெளியேறினர்!

வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 31 தமிழ் இளைஞர்கள் உட்பட 405 பேர் இராணுவத்தில் முதல்கட்ட பயிற்சியை முடித்து நேற்று புதன்கிழமை வெளியேறினர். அத்துடன் அவர்களது அணிவகுப்புகளும் இடம் பெற்றன.

இராணுவத்தின் 23ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் முதலாவது பயிற்சிகளை நிறைவு செய்த 405 தமிழ் சிங்கள, முஸ்லிம் இராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவு நாள் நிகழ்வுகள் நேற்றுப் பகல் புனாணையிலுள்ள படைப்பிரிவின் தலைமையகத்தில் நடைபெற்றன.

இந்தப் பயிற்சி நிறைவு நிகழ்வில், பிரதம அதிதியாக 23ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் டி.டி.யு.கே.ஹெட்டியாராய்ச்சி கலந்துகொண்டு அணிவகுப்பு மரியாதைகளையும் மரியாதை வேட்டுக்களையும் ஏற்றுக் கொண்டார்.

அத்துடன், 24ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ரோகண பண்டார, 231ஆவது பிரிக்கேட்டின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பாலித பெர்ணான்டோ, 232ஆவது பிரிகேட்டின் கட்டளை அதிகாரி கேர்ணல் ரவீந்திர டயஸ், 233ஆவது பிரிகேட்டின் கட்டளை அதிகாரி நந்த கத்துருசிங்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பயிற்சிகளை நிறைவு செய்தவர்களில் 31 தமிழ் இளைஞர்களும் 7 முஸ்லிம் இளைஞர்களும் அடங்குகின்றனர். நாடுபூராகவும் இருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர்கள் மூன்றரை மாத பயிற்சிகள் மேற்கொண்டனர்.

பயிற்சியின் போது தமது திறமையாகச் செயற்பட்ட இராணுவ வீரர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. புதிய இராணுவ வீரார்களின் அணிவகுப்புகளை அடுத்து, பாண்டு வாத்திய அணியினரின் இசை நிகழ்வும், இராணுவத்தினரின் விசேட உடற் பயிற்சி அணிவகுப்பும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அவர்களின் பெற்றோர்கள், உறவினர்களும் கலந்துகொண்டனர்.

Related Posts