Ad Widget

தமிழ்நாட்டிலிருந்து 40 அகதிகள் தாயகம் திரும்புகின்றனர்!

தமிழ்நாட்டின் பல முகாம்களில் அகதிகளாக வசித்த 40 பேர் தாமாகவே யூ.என்.எச்.சி.ஆர். நிறுவனத்தின் உதவியுடன் இலங்கைக்கு மீண்டும் திரும்பினர் என ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் இம் மக்கள் தாமாக முன்வந்து தங்கள் நாட்டுக்குத் திரும்புவது இதுவே முதல் தடவை. எனினும் நாடு திரும்பும் இந்த அகதிகளுக்கு அரசாங்கம் எந்த உதவிகளையும் செய்யவில்லை.

அகதிகள் நாடு திரும்புவதற்கு உதவும் யூ.என்.எச்.சி.ஆர். நிறுவனம் கடந்த 2002 இலிருந்து 2014 இற்குள் 12 ஆயிரத்து 355 அகதிகள் நாடு திரும்புவதற்கு உதவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு திரும்பும் அகதிகள் தி இந்து நாளிதழுக்கு வழங்கிய கருத்துக்கள் வருமாறு:

1996 ஆம் ஆண்டு அகதியாக சட்டவிரோதப் படபு மூலமாக தமிழ்நாட்டுக்கு சென்றவரான கருப்பையா (வயது 65) என்பவர் கூறுகையில் “என்னுடன் வந்தவர்கள் ஏற்கனவே நாடு திரும்பி விட்டனர். நான் மட்டும்தான் தயக்கம் காட்டி வந்தேன். நான் எனது நாட்டுக்கு சென்று என் பிள்ளைகள், காணிகளைப் பார்க்க வேண்டும். என் கடைசி மூச்சை நாட்டிலேயே விடவேண்டும்.”

வவுனியா செட்டிக்குளத்தை சேர்ந்த 30 வயதான ராஜேஸ்வரி என்பவர் கூறுகையில் “எனது மகன்களில் ஒருவருடன் 2008 ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறினேன். இப்போது எனது தந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவரைப் பார்க்க நான் செல்ல வேண்டும். எனது மூத்த மகன் காணாமல் போய்விட்டார். அரைகுறையாக கட்டிய எனது வீட்டை கட்டி முடிக்க வேண்டும்.” என்றனர்.

Related Posts